உள்ளூர் செய்திகள்
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க அண்ணா அறிவாலயம் வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்- மு.க.ஸ்டாலினுடன் கே.எஸ்.அழகிரி சந்திப்பு

Published On 2022-01-28 05:59 GMT   |   Update On 2022-01-28 05:59 GMT
தி.மு.க. கூட்டணியில் இட பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்துள்ளது போல் அ.தி.மு.க. கூட்டணியில் தேர்தலுக்கான பேச்சுவார்த்தைகள் தீவிரம் அடைந்துள்ளன.
சென்னை:

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி நடக்கிறது.

இதில் மாமன்ற உறுப்பினர்கள், நகராட்சி உறுப்பினர்கள், பேரூராட்சி உறுப்பினர்கள் மட்டும் நேரடியாக தேர்வு செய்யப்படுவார்கள்.

மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர்கள், பேரூராட்சி தலைவர்களை தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தேர்வு செய்வார்கள். தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்கியது. அடுத்த மாதம் 4-ந்தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.

வேட்புமனு தாக்கல் தொடங்கிவிட்டதால் கட்சிகள் கூட்டணியை உறுதி செய்தல், இடங்கள் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் காணொலி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது ஒவ்வொரு மாவட்ட செயலாளரிடமும் அவரவர் பகுதியில் பேரூராட்சி முதல் மாநகராட்சி வரை உள்ள வார்டுகள் எண்ணிக்கை, வேட்பாளர்கள் தேர்வு நிலவரங்கள் பற்றி கேட்டறிந்தார். அனைத்து இடங்களிலும் வெற்றிபெறும் அளவுக்கு கடுமையாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதைத் தொடர்ந்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், துணை பொதுச்செயலாளர் சத்திரியன் வேணுகோபால் ஆகியோர் இடம் பங்கீடு பற்றி பேச்சு நடத்த வந்தனர். சுமார் 15 நிமிடங்கள் இந்த பேச்சுவார்த்தை நடந்தது.

அதைத் தொடர்ந்து இடப்பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கு.செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. ஆகியோர் அண்ணா அறிவாலயம் சென்றனர்.

அவர்கள் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது காங்கிரசுக்கு 3 மேயர் பதவிகள் வேண்டும். மேலும் சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை 21 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. எனவே ஒரு தொகுதிக்கு ஒரு இடம் வேண்டும் என்பது உள்பட தமிழகம் முழுவதும் போட்டியிட விரும்பும் இடங்கள் பற்றி தெரிவித்தனர்.

தி.மு.க. கூட்டணியில் இட பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்துள்ளது போல் அ.தி.மு.க. கூட்டணியில் தேர்தலுக்கான பேச்சுவார்த்தைகள் தீவிரம் அடைந்துள்ளன.



அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று காலை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

இந்த ஆலோசனையின் போது பா.ஜனதாவுடன் கூட்டணியை தொடர்வது, இட பங்கீடு செய்து கொள்வது பற்றி விவாதித்தனர்.

சென்னையில் உள்ள 8 மாவட்ட செயலாளர்களையும் தங்கள் பகுதியில் உள்ள வார்டுகளில் போட்டியிட விரும்புவர்களின் பட்டியலுடன் வரும்படி அழைத்துள்ளனர்.

அப்போது சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட தகுதியான வேட்பாளர்கள் முடிவு செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.

தமிழக பா.ஜனதாவிலும், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக இன்று காலை ஆலோசனை நடந்தது. மாவட்ட தலைவர்கள் 60 பேருடன் சென்னை தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாநில தலைவர் அண்ணாமலை ஆலோசனை நடத்தினார்.

பா.ஜனதாவில் தனித்து போட்டியிட வேண்டும் என்று சில மாவட்ட நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர். ஆனால் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடுவதே சிறந்தது என்று பலர் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட முடிவு செய்யப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுதொடர்பாக அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா தலைவர்கள் இன்று மாலை அல்லது நாளை காலை சந்தித்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போல் தேர்தலை தனியே சந்திக்கப்போகும் பா.ம.க., தே.மு.தி.க., நாம்தமிழர், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளும் தனித்தனியே ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.

இன்று மாலை 6 மணிக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் , இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்திற்கு கட்சித்தலைவர் ஜி.கே.மணி தலைமையேற்கிறார். கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இக்கூட்டத்தில் பா.ம.க. மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளும், பா.ம.க.வின் பல்வேறு அணிகள், துணை அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.

அப்போது பா.ம.க. எங்கெங்கு போட்டியிட வேண்டும்? போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்று ஆலோசனை நடத்துகிறார்கள்.

இந்ததேர்தலை பொறுத்தவரை தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி தே.மு.தி.க., பா.ம.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்பட 7 கூட்டணிகள் தேர்தலை சந்திக்கின்றன.


Tags:    

Similar News