உள்ளூர் செய்திகள்
காங்கிரஸ்

ஆவடி, திருச்சி, சிவகாசி 3 மேயர் பதவிகளை கேட்கும் காங்கிரஸ்- ஆசை நிறைவேறுமா?

Published On 2022-01-27 10:25 GMT   |   Update On 2022-01-27 11:25 GMT
சென்னை அருகில் உள்ள ஆவடி வெளி மாவட்டங்களில் திருச்சி, சிவகாசி ஆகிய 3 மேயர் பதவிகளையும் கேட்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
சென்னை:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது.

மொத்தம் 21 மாநகராட்சிகள் உள்ளன. மறைமுக தேர்தல் மூலம் 21 மேயர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசுக்கு மிக குறைந்த எண்ணிக்கையிலேயே இடங்கள் ஒதுக்கப்பட்டன.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 3 மேயர் பதவிகளாவது வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது. சென்னை அருகில் உள்ள ஆவடி வெளி மாவட்டங்களில் திருச்சி, சிவகாசி ஆகிய 3 மேயர் பதவிகளையும் கேட்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

காங்கிரஸ் தரப்பில் சில முக்கிய நிர்வாகிகளை மனதில் வைத்தே இந்த 3 மாநகராட்சிகளையும் கேட்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

காங்கிரசின் ஆசைப்படி 3 மேயர் பதவிகளை தி.மு.க. விட்டுக்கொடுக்குமா என்று தெரியவில்லை. இது பற்றி காங்கிரஸ் நிர்வாகிகள் கூறும்போது, ஏற்கனவே தி.மு.க. கூட்டணியில் இருந்தபோது 2006 தேர்தலில் காங்கிரசுக்கு கோவை மற்றும் திருச்சி மாநகராட்சிகள் ஒதுக்கப்பட்டன. அப்போதும் மறைமுக தேர்தல்தான். அப்போது கோவையில் காலனி வெங்கடாசலமும், திருச்சியில் சாருபாலா தொண்டைமானும் மேயர்களாக தேர்வு செய்யப்பட்டார்கள்.

அப்போது மொத்த மாநகராட்சிகளின் எண்ணிக்கை 6 தான். இப்போது 21 மாநகராட்சிகள் உள்ளன. எனவே 3 மேயர் பதவி என்பது குறைவுதான். எனவே தி.மு.க. ஒதுக்கீடு செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது என்றனர்.





Tags:    

Similar News