உள்ளூர் செய்திகள்
அன்பில் மகேஷ்

பள்ளிகள் திறப்பு எப்போது?: அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்

Published On 2022-01-26 04:53 GMT   |   Update On 2022-01-26 08:07 GMT
கொரோனா வைரஸ் தொற்றின் 3-வது அலை காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், மீண்டும் திறப்பது குறித்து அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
சென்னை கடற்கரை சாலையில் உள்ள பாரத சாரண- சாரணியர் இயக்க தலைமை அலுவலகத்தில் குடியரசு தினவிழா இன்று காலை கொண்டாடப்பட்டது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்வி ஆணையர் நந்தகுமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக சட்டமன்றம் நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டு கவர்னருக்கு அனுப்பிய மசோதாவை அவர் குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு. தமிழக கவர்னர் தொடர்ந்து நீட் தேர்வுக்கு ஆதரவாக பேசி வருகிறார். ஆனால் நீட் தேர்வில் இருந்து விலக்குபெற வேண்டும் என முதல்-அமைச்சர் தொடர்ந்து முயற்சித்து வருகிறார்.


அரசு பள்ளிகளை வலுப்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிப்ரவரி மாதத் தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்து இருக்கிறோம்.

பொதுத்தேர்வுக்கு முன்பு 2 திருப்புதல் தேர்வு நடத்த திட்டமிட்டு இருந்தோம். பிப்ரவரி மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் ஒரு திருப்புதல் தேர்வு மட்டுமே நடைபெறும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வினாத்தாள் வடிவமைப்பு முறையில் எந்த மாற்றமும் இருக்காது.

இதற்கு முன்பு பொதுத் தேர்வுகள், கேள்வித்தாள் எப்படி நடைபெற்றதோ அப்படியே இந்த ஆண்டும் நடைபெறும்.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வந்தபிறகுதான் அரசுப்பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என்று கவர்னர் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டு இருக்கிறார்.

ஆரம்பத்தில் இருந்தே அதனை நியாப்படுத்தும் விதத்தில்தான் அவர் கூறுகிறார். அரசுப்பள்ளிகளை உயர்த்துவதற்கு முதல்- அமைச்சர் எவ்வளவு முயற்சி செய்கிறார் என்று தெரியும். இருமொழிக் கொள்கைதான் நம்முடைய கொள்கை. அதில் இருந்து நாம் பின் வாங்கமாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News