உள்ளூர் செய்திகள்
அதிமுக-திமுக

கோவை மாநகராட்சி உள்ளாட்சி தேர்தல்: தி.மு.க.- அ.தி.மு.க. சார்பில் போட்டியிட கடும் போட்டி

Update: 2022-01-26 04:12 GMT
சென்னைக்கு அடுத்த படியாக உள்ள பெரிய மாநகராட்சியான கோவை மாநகராட்சியில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட தி.மு.க., அ.தி.மு.க.வினரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது

கோவை:

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் வாக்காளர் தேர்வு பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

சென்னைக்கு அடுத்த படியாக உள்ள பெரிய மாநகராட்சியான கோவை மாநகராட்சியில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட தி.மு.க., அ.தி.மு.க.வினரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதற்காக 2 கட்சியினரிடமும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வேட்பாளர் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

கோவை மாவட்டத்தில் மொத்தம் 33 பேரூராட்சிகள் உள்ளன. இந்த பேரூராட்சிகளில் 329 கவுன்சிலர் இடங்கள் உள்ளன. இதே போல் மாவட்டத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, மதுக்கரை, கருமத்தம்பட்டி, காரமடை, கூடலூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட 7 நகராட்சிகள் உள்ளன. இந்த நகராட்சிகளில் 198 கவுன்சிலர் இடங்கள் காலியாக உள்ளன.

இதற்காக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் விருப்பமனு அளித்து உள்ளனர்.

கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. இந்த 100 வார்டுகளில் 50 வார்டுகள் பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தி.மு.க. சார்பில் ஒரு வார்டில் போட்டியிட 10 பேர் முதல் அதிகபட்சமாக 40 பேர் விருப்ப மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இவ்வாறு விருப்ப மனுத் தாக்கல் செய்தவர்களிடம் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. சார்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் 2 நாட்கள் நேர்காணல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு உள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு இட ஒதுக்கீடு முடிந்ததும் தி.மு.க. சார்பில் போட்டியிடுபவர்களின் விவரங்களை தி.மு.க. தலைமை அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல அ.தி.மு.க. சார்பிலும் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு வார்டிலும் 40 பேர் வரை விருப்ப மனுத்தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் ஒருவரை வேட்பாளராக தேர்வு செய்யும் பணி கோவை மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்து வருகிறது.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் கடந்த சில நாட்களாக நிர்வாகிகள் நேர்காணல் நடத்தி வேட்பாளர்களை தேர்வு செய்து வருகிறார்கள். தேர்தல் அறிவிக்கப்பட்டதும் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் வகையில் அ.தி.மு.க.வினர் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News