உள்ளூர் செய்திகள்
சென்னை உயர்நீதிமன்றம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்

Update: 2022-01-25 10:00 GMT
தேர்தல் அறிவித்தால் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி நடத்தப்பட வேண்டும் என தமிழக தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. இதற்கிடையே கொரோனா 3-வது அலை தீவிரமாக உள்ளதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கோரி டாக்டர் நக்கீரன் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இதே கோரிக்கையுடன் டாக்டர் பாண்டியராஜ் உள்பட மேலும் பலர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகள் அனைத்தும் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.கேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. 5 மாநில சட்டசபை தேர்தலே நடைபெறும் போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க முடியாது என்று கூறி ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்தது.

கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து தேர்தலை நடத்தலாம் என்றும் ஐகோர்ட் அறிவுறுத்தியது. இந்த வழக்கு இன்று மீண்டும் ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தேர்தலை நடத்த தடையில்லை. தள்ளி வைக்க உத்தரவிட முடியாது. அப்படி உத்தரவிட்டால் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணமாக அமைந்துவிடும். தமிழக தேர்தல் ஆணையம்  வழிகாட்டு நெறிமுறைகளை கட்சிகள் கடைபிடிக்க வேண்டும். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் மீறப்பட்டால் நீதிமன்றத்தை நாடலாம். தொடர்பான அரசியல் சாசன விதிகளை தேர்தல் ஆணையம் போன்ற அரசியல் சாசன அமைப்புகள் புறக்கணிக்க கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், தேர்தல் அறிவித்தால் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி நடத்தப்பட வேண்டும் என தமிழக தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மேலும் 4 மாதம் அவகாசம் வழங்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மேலும் 4 மாதம் அவகாசம் வழங்கி கடந்த செப்டம்பர் 27-ல் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த காலக்கெடு வருகிற 27-ந்தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் மேலும் 4 மாத அவகாசம் வழங்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சார்பிலும் அவகாசம் கோரி இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதனால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் திட்டமிட்டப்படி நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
Tags:    

Similar News