உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

காப்பக குழந்தைகளுக்கு யோகா - கராத்தே பயிற்சி

Published On 2022-01-24 09:44 GMT   |   Update On 2022-01-24 09:44 GMT
பெற்றோர், பாதுகாவலர் பொறுப்பில், குடும்ப சூழலில் தான் குழந்தைகள் வளர வேண்டும்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் 15 காப்பகங்கள், மாநகராட்சிக்குள் 5 காப்பகங்கள் இயங்குகின்றன. இங்கு 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்கி அடிப்படை கல்வி பெற்றனர். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பெற்றோர், பாதுகாவலர் விருப்பம் தெரிவித்ததன் பேரில்  சிலர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள குழந்தைகள் காப்பகத்தில் உள்ளனர்.

இந்தநிலையில் சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில்: 

பெற்றோர், பாதுகாவலர் பொறுப்பில், குடும்ப சூழலில் தான் குழந்தைகள் வளர வேண்டும். ஆனால் அச்சூழல் இல்லாத காரணத்தால் காப்பகத்திற்கு வந்த குழந்தைகள் ஊரடங்கு காரணமாக மீண்டும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்ற கண்காணிப்பு இல்லை. மீண்டும் இக்குழந்தைகள் இடைநிற்க வாய்ப்புள்ளது.

இவர்களின் நிலை குறித்து ஆய்வு செய்ய வேண்டியது அவசியம். தற்போது காப்பகத்தில் உள்ள குழந்தைகளின் நலனுக்காக தற்காலிக ஆசிரியர்களை நியமித்து பள்ளி திறக்கும் வரை வழிநடத்த நிர்வாகிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என்றனர்.

இதுகுறித்து அனுப்பர்பாளையம் அருகேயுள்ள மரியாலயா குழந்தைகள் காப்பக அதிகாரிகள் கூறுகையில்:

ஊரடங்கிலும் மாணவர்களின் கல்வி பாதிக்காத வண்ணம், கற்றல் விளைவுகளை மேம்படுத்த காப்பகங்கள்தோறும் தன்னார்வ இளைஞர்கள் மூலமாக பல பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

யோகா பயிற்சி, கராத்தே, ரங்கோலி, ஓவியம், காகித கிராப்ட், செஸ், நாட்டியம் என பலவித பயிற்சிகள் வழங்குவதன் மூலம் காப்பக குழந்தைகளை எப்போதும் உற்சாகத்துடன் பார்த்துக்கொள்கின்றனர் இளைஞர்கள் என்றனர்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் கேட்டபோது, கல்வி தொலைக்காட்சி சேனல், லேப்டாப், செல்போன் மூலம், இவர்கள் படிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட குழந்தைகள், அடுத்த வகுப்புக்கு செல்ல, சேர்க்கை உறுதி செய்யப்பட்டுள்ளது,’என்றனர்.
Tags:    

Similar News