உள்ளூர் செய்திகள்
ஆழித்தேரில் பொருத்த புதிய குதிரை பொம்மைகள் தயாரிக்கும் பணி.

ஆழித்தேரில் பொருத்த குதிரை பொம்மைகள் தயாரிப்பு தீவிரம்

Published On 2022-01-24 02:10 GMT   |   Update On 2022-01-24 02:10 GMT
திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோவில் ஆழித்தேரில் பொருத்த புதிய குதிரை பொம்மைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
திருவாரூர்:

திருவாரூர் தியாகராஜசுவாமி கோவில் தேர் ஆசிய கண்டத்திலேயே  மிகப்பெரிய தேராகும். அதனால் இத்தேரினை ஆழித்தேர் என அழைக்கின்றனர்.

இத்தேர் பீடம் 32 அடி உயரமும், 32 அடி அகலமும் கொண்டது. 
இந்த தேரின் பீடம் மற்றும் 4 ராட்சத  இரும்பு சக்கரங்கள் உட்பட 
மொத்தம் 220 டன் எடை கொண்டதாகும். 

இதில் தேரோட்டத்தின் போது மூங்கில்கள், பனஞ்சப்பைகள் 
கொண்டு  விமானம் வரையில் 46 அடி உயரத்திற்கு கட்டுமான பணி, 
அதன் மேல் 12 அடி உயரத்திற்கு சிகரம், அதற்கும் மேல் 6 அடி 
உயரத்தில் தேர் கலசம் என மொத்தம் 96 அடி உயரத்தில் 
அலங்கரிக்கப்படும்.
 
அலங்கரிக்கப்பட்ட தேரின் எடை சுமார் 300 டன் எடையுடன் இருக்கும். இத்தேரின் முன் பகுதியில் 33 அடி நீளமும், 11 அடி உயரமும் கொண்ட கம்பீரமான 4 மர குதிரைகள் கட்டப்பட்டு, தேரானது மிக பிரமாண்டமாய் இருக்கும். 96 அடி உயரத்தில் அதன் மைய அகலம் 96 அடி என்ற அளிவில் அலங்கரிக்கப்பட்ட தேர் மக்கள் கூட்டத்தின் இடையே நகரின் 
4 வீதிகளையும் அசைந்தாடியபடி  நகர்ந்து செல்லும் அழகானது கண்கொள்ளா காட்சியாகும்.
 
இந்த ஆண்டு ஆழித் தேரோட்டமானது 15.3.2022 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பந்தகால்  முகூர்த்தம் 
நிகழ்ச்சியும் கடந்த 18-ந் தேதி நடைபெற்றது. 

இந்நிலையில் தேரோட்டத்திற்கு பின்னர் ஆண்டுதோறும் இந்த மரக்குதிரைகள் அவ்வப்போது சீரமைத்து தேரில் பொருத்துவர். 
கடந்தாண்டு வரை பயன்படுத்தப்பட்ட குதிரைகள் மிகவும் 
வலுவிழந்து காணப்பட்டதால் புதிய குதிரைகள் அமைக்க கோவில் 
நிர்வாகம் முடிவெடுத்தது. 

அதன்படி உபயதாரர்கள் மூலம் 4 குதிரைகளும் புதிதாக தயாரிக்கப்பட்டு வருகிறது. புதிய குதிரைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் தேரோட்டம் முடிந்து கீழவீதியில் உள்ள தேரடியில் கண்ணாடி அரங்கிற்குள் தேர்பீடம் பொதுமக்கள் பார்க்கும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. 

விரைவில் இந்த அரங்கினை பிரித்து தேர் கட்டுமானப்பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த ஆண்டு ஆயில்ய நட்சத்திர நாளில் தேரோட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Tags:    

Similar News