உள்ளூர் செய்திகள்
புளியரையை அடுத்த கோட்டைவாசல் பகுதியில் வாகன சோதனையில் சுகாதார துறையினர்.

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு- தென்காசி எல்லையில் மருத்துவ குழு தீவிர கண்காணிப்பு

Published On 2022-01-23 07:47 GMT   |   Update On 2022-01-23 07:47 GMT
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள புளியரை சோதனை சாவடி வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மூலம் பொதுமக்கள் கேரளவிற்கு சென்று வருகிறார்கள்.

செங்கோட்டை:

தமிழகத்தில் கொரேனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 3-வது அலையின் புதிய உச்சமாக நேற்று பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டியது.

தலைநகர் சென்னையில் கடந்த ஒருவாரமாக தொற்று வேகம் குறைந்தாலும் மற்ற மாவட்டங்களில் அதிகம் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் சோதனைகளை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

குறிப்பாக கேரளா, கர்நாடகா மாநில எல்லைப் பகுதியில் உள்ள மாவட்டங்களில் உள்ள சோதனை சாவடிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரமடைந்து உள்ளது.

கேரளாவில் கடந்த வியாழக்கிழமை அதிக பட்சமாக ஒருநாள் பாதிப்பு 46 ஆயிரத்தை தாண்டிய நிலையில் நேற்றும் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.

திருவனந்தபுரம், கொச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனால் கேரள அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. தமிழகத்தை போல இன்று முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள புளியரை சோதனை சாவடி வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மூலம் பொதுமக்கள் கேரளவிற்கு சென்று வருகிறார்கள்.

கேரளாவில் தொற்று வேகம் அதிகரித்துள்ளதால் புளியரை சோதனை சாவடியில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை, வருவாய்த்துறை, காவல்துறை சார்பில் தீவிர சோதனை நடத்தப்பட்டு தமிழகத்திற்குள் வருபவர்கள் கடுமையான சோதனைகளுக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்

சுகாதார ஆய்வாளர், ஆய்வக தொழில்நுட்ப பணியாளர்கள், உதவியாளர்கள் ஆகியோரை கொண்ட மருத்துவக்குழு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணித்து வருகின்றனர்.

தமிழகம் வரும் அனைவரிடமும் கொரோனா தடுப்பூசி 2 தவணைகள் செலுத்தப்பட்டதற்கான சான்றிதழ்களை காட்டிய பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சான்றுகள் இல்லாமல் வருபவர்கள் மீண்டும் கேரளாவிற்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

நெல்லை, தூத்துக்குடியை தவிர ராஜபாளைம், மதுரை, கடையநல்லூர், தென்காசி, சங்கரன்கோவில் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் வெளி நாடுகளில் இருந்து வரும் போது திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கே அதிகளவில் வருகிறார்கள்.

அவ்வாறு வெளிநாடுகளில் இருந்து கேரளா வழியாக புளியரை வரும் பயணிகளிடம் 2 தவணை தடுப்பூசி சான்றிதழ் மட்டுமில்லாது 72 மணிநேரத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட கொரோனா நெகடிவ் சான்றிதழ்களும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அனைத்து வாகனங் களுக்கும் கிருமி நாசினி தெளிக்கபட்டு வருகிறது.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் புளியரை சோதனை சாவடி முழு ஊரடங்கான இன்று வெறிச்சோடி காணப்பட்டது காய்கறி, பால், மருந்து, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அத்தியாவசிய வாகனங்கள் மட்டும் சென்று வர சோதனை சாவடியில் அனுமதி வழங்கப்பட்டது.

அதேபோல் திருமணம், இறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சென்றவர்களிடம் முறையான ஆவணங்களை காட்டிய பின்னரே அனுமதித்தனர்.

இது தொடர்பாக தென்காசி மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் டாக்டர் அனிதா கூறியதாவது:-

புளியரை சோதனைச் சாவடியில் வழக்கம் போல் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும் கேரளாவில் தற்போது கொரோனா அதிகரித்துள்ளதால் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு, சோதனைகள் நடத்தப்படுகிறது.

எல்லைப்பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சுகாதார ஆய்வாளர் ஒருவர் மற்றும் ஆய்வக தொழில்நுட்ப பணியாளர்கள், உதவியாளர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் சுழற்சி முறையில் 3 ஷிப்டுகளாக இரவும் பகலும் பணியாற்றி வருகிறார்கள்.

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களிடம் 2 தவணை தடுப்பூசி செலுத்தி, கொரோனா இல்லை என்ற சான்று இருந்தாலும் அவர்களுக்கு மீண்டும் மாதிரி எடுக்கப்பட்டு கண்டிப்பாக பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் மற்றும் கேரளாவில் இருந்து ரெயில்கள் மூலம் தமிழகத்திற்கு வருபவர்களை சோதனை செய்ய செங்கோட்டை, தென்காசி ரெயில் நிலையங்களில் சுகாதார குழுவினர் முகாமிட்டு பரிசோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சோதனைச் சாவடியில் யாருக்காவது காய்ச்சல் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டால், அங்கேயே அவர்களுக்கு மாதிரி எடுக்கப்பட்டு அவர்கள் எங்கே செல்கிறார்கள்? என்று கேட்டு அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு ஊழியர்கள் கண்காணித்து வருகிறார்கள்.

தமிழகத்துக்கு வருபவர்களின் முகவரி, செல் போன் எண் போன்றவற்றை பதிவு செய்து அந்த பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கேரளாவில் இருந்து ரெயில் மூலம் நெல்லைக்கு வரும் பயணிகளுக்கு தீவிர பரிசோதனை செய்ய நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார். அதன்படி நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு கேரளாவில் இருந்து வரும் ரெயில்களில் வந்திறங்கும் பயணிகளை சுகாதார பணியாளர்கள் தடுத்து நிறுத்தி உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்கிறார்கள்.

இதில் உடல்நலம் பாதிப்பு மற்றும் உடல் சோர்வு காணப்பட்டால் அவர்களுக்கு உடனடியாக கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

இதுதவிர கேரளாவை சேர்ந்த பயணிகள் சாலை மார்க்கமாக கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட் டங்கள் வழியாக நெல்லைக்கு வருகிறார்கள். அவர்களது வருகை மற்றும் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதார ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News