இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் யாரும் கொரோனா தாக்கினாலும் இறப்பின் எல்லை வரை சென்றது இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று குறைந்தால் இனிவரும் வாரங்களில் முழு ஊரடங்கு இருக்காது- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
பதிவு: ஜனவரி 23, 2022 11:45 IST
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை:
நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு தமிழக அரசின் சார்பில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாலை அணிவித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா 3-வது அலை தொடங்கிய நாளில் இருந்து இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதற்கு மக்கள் ஒத்துழைப்பு தருகிறார்கள்.
அதேபோல் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்குக்கும் முழு ஒத்துழைப்பு வழங்குகிறார்கள்.
கடந்த 2 நாட்களாக தொற்று எண்ணிக்கை சற்று குறையத்தொடங்கி இருப்பது ஆறுதலை தருகிறது. சென்னையில் தினசரி பாதிப்பு 9 ஆயிரம் என்பது வரை சென்றது. ஆனால் நேற்று 6 ஆயிரமாக குறைந்துள்ளது.
இதுபோன்று கொரோனா தொற்று குறைந்தால் இனி வரும் வாரங்களில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு இருக்காது.
இந்தியா முழுவதுமே பெரு நகரங்களில் தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. விரைவில் இந்த பெருந்தொற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இறப்பு விகிதம் சதவீத அடிப்படையில் பார்த்தால் சற்று அதிகரித்துள்ளது. அதேநேரம் இறந்தவர்களின் மருத்துவ பின்னணிகளை பார்த்தால் இணை நோய் உள்ளவர்களாகவும், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களாகவும் இருக்கிறார்கள்.
இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் யாரும் கொரோனா தாக்கினாலும் இறப்பின் எல்லை வரை சென்றது இல்லை. எனவே அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.... தமிழக மீனவர்களின் 105 படகுகளை ஏலம் விட இலங்கை அரசு முடிவு!