உள்ளூர் செய்திகள்
வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்படும் கே.டி.சி. நகர் புறவழிச்சாலை.

நெல்லை மாவட்டத்தில் வெறிச்சோடிய சாலைகள்

Published On 2022-01-23 06:07 GMT   |   Update On 2022-01-23 06:07 GMT
நெல்லை மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி பொதுப்போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் சாலைகளில் வாகனங்கள் நடமாட்டம் இல்லை. இதனால் சாலைகள் வெறிச்சோடின.
நெல்லை:

தமிழகத்தில் கொரோனா, ஒமைக்ரான் வைரசை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 வாரங்களிலும் ஞாயிற் றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் இருந்தது.

இந்த நிலையில் 3&வது வாரமாக இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் பொது போக்குவரத்திற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டது. அத்தியாவசிய தேவைக்கு செல்லும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது.

நெல்லை மாநகர பகுதியில் டவுன், சந்திப்பு, பாளை, தச்சநல்லூர், மேலப்பாளையம், கே.டி.சி. நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வணிக நிறுவனங்கள் முழு அளவில் மூடப்பட்டது. மாவட்டத்திலும் ராதாபுரம், வள்ளியூர், நாங்குநேரி, களக்காடு, அம்பை உள்ளிட்ட பகுதிகளிலும் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும் சுற்றுலா தலங்களான அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, களக்காடு தலையணை, உவரி கடற்கரை உள்ளிட்ட பகுதிகளிலும் ஆள் நடமாட்டம் இல்லை.

மருந்துகடைகள், பால் கடைகள், ஒரு சில ஓட்டல்கள் தவிர மற்ற அனைத்து வகையான கடைகளும் மூடப்பட்டன. இதனால் கடைவீதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி காணப்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் முழுமையாக போக்குவரத்து இல்லாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. நெல்லை மாநகர எல்லையில் பழைய பேட்டை, மேலப்பாளையம், தாழையூத்து, கே.டி.சி. நகர், டக்கரம்மாள்புரம், பேட்டை, வி.எம்.சத்திரம் ஆகிய இடங்கள் உள்பட மொத்தம் 18 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து போலீ சார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதுதவிர மாநகரின் உள் பகுதியில் முக்கிய சந்திப்புகளில் தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணித்தனர். அப்போது விதிமுறைகளை மீறி வந்தவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் தொடர்ந்து சுற்றித்திரிந்தவர்களுக்கும், அத்தியாவசிய தேவையின்றி வந்தவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

ஆறு மற்றும் குளக்கரைகள் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூடுவதை தடுக்கும் வகையில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தினர்.

இதனால் நெல்லை மாவட்டத்தில் பொதுமக்கள் வெளியே வராமல் வீடுகளில் முடங்கினர். இதன் காரணமாக சாலைகள், கடை வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

அதேசமயம் ஏற்கனவே வெளியூருக்கு செல்வதற்காக ரெயிலில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அவர்கள் வாடகை கார் மற்றும் வாடகை ஆட்டோக்களில் சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

ஆங்காங்கே கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரிடம் ரெயிலில் பயணம் செய்வதற்கான டிக்கெட்டை காண்பித்து அவர்கள் சென்றனர்.

ரெயில் நிலையத்திலிருந்து வீடுகளுக்கு திரும்பும் பயணி களுக்கும் இதே நடைமுறை கடை பிடிக்கப்பட்டது. அவர்களும் டிக்கெட்டை காண்பித்து வீட்டுக்கு சென்றனர்.

இதனால் மாவட்டத்தில் வாடகை வாகனங்கள் மட்டும் ஓரளவு இயக்கப்பட்டது. இதேபோல நேற்று இரவு வெளியூர்களில் இருந்து புறப்பட்ட  அரசு விரைவு பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்களில் வந்து இறங்கிய பயணிகள் வாடகை வாகனங்களில் வீடு திரும்பினர்.
Tags:    

Similar News