உள்ளூர் செய்திகள்
வெறிச்சோடிய சாலை

3-வது வாரமாக முடங்கிய தமிழகம்: கடைகள் அடைப்பு- சாலைகள் வெறிச்சோடின

Published On 2022-01-23 06:06 GMT   |   Update On 2022-01-23 06:06 GMT
ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், அனைத்து கடைகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில் சாலைகள் வெறிச்சோடின.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 6-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கும் கடை பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 8, 16 ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் 3-வது வாரமாக இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

நேற்று இரவு 10 மணியில் இருந்து இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கும் கடைபிடிக்கப்படுவதால் தொடர்ச்சியாக நேற்று இரவில் இருந்து சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.



சென்னை உள்பட தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் முழு ஊரடங்கை கடுமையாக அமல்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

இதன்படி இன்று முழு ஊரடங்கு தமிழகம் முழுவதும் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக மக்கள் நடமாட்டமின்றி அனைத்து மாவட்டங்களிலும் நகர்ப்புறங்களில் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள சாலைகள் என அனைத்து சாலைகளும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆள்நடமாட்டமின்றி தமிழகம் முழுவதும் 3-வது வாரமாக மக்கள் வீடுகளில் முடங்கி இருந்தனர்.

ஞாயிற்றுக்கிழமைகளில் ஒவ்வொரு வாரமும் பரபரப்பாக காணப்படும் கடைவீதிகள் அனைத்தும் ஆள்நடமாட்டமின்றி காணப்பட்டது.

சென்னையில் தி.நகர், பாரிமுனை, வண்ணாரப் பேட்டை, புரசைவாக்கம், மாதவரம், பெரம்பூர், செங்குன்றம், அண்ணாநகர், கோயம்பேடு உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மக்கள் அதிகம் கூடும் மார்க்கெட்டுகள், வணிக பகுதிகள் ஆகியவையும் மூடப்பட்டு இருந்தன.

இதுபோன்று தமிழகம் முழுவதும் முக்கியமான சந்தைகள், வணிக பகுதிகள் ஆகியவையும் செயல்படவில்லை.



சென்னையில் ஊரடங்கை மீறி மக்கள் வெளியில் சுற்றுகிறார்களா? என்பதை கண்காணிக்க தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதேபோன்று திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, கோவை, சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு, திண்டுக்கல், கடலூர், விழுப்புரம் உள்பட அனைத்து முக்கிய நகரங் களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டு இருந்தன.

தேவையின்றி சுற்றித்திரிந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி அபராதம் விதித்தனர்.

முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போதிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முக்கிய பணிகளுக்கு தடைவிதிக்கப்படவில்லை. அந்த வகையில் அத்தியாவசிய பணியாளர்கள் இன்று வழக்கம்போல தங்களது பணியை மேற்கொண்டனர். தூய்மை பணியாளர்கள், ஆஸ்பத்திரி ஊழியர்கள், பெட்ரோல் பங்க் பணியா ளர்கள், பத்திரிகையாளர்கள், பால் வினியோகம் செய்பவர்கள் உள்ளிட்டோர் வழக்கம்போல தங்களது பணிகளை மேற்கொண்டனர்.

இப்படி அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டவர்களிடமும் அடையாள அட்டையை வாங்கி பரிசோதித்த பிறகே அனுமதித்தனர்.

முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையிலும் ஓட்டல்கள் திறந்து இருந்தன. சாப்பிடுவதற்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில் பார்சல்கள் மட்டும் வழங்கப்பட்டன.

இதுபோன்று பார்சல்களை வாங்குவதற்கு அருகில் உள்ள ஓட்டல்களுக்கு உணவு டெலிவரி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் வந்திருந்தனர். ஓட்டல் உரிமையாளர்கள் அவர்களிடம் தனித்தனியாக நின்று சமூக இடைவெளியை பின்பற்றி பார்சல்களை வாங்கி செல்ல அறிவுறுத் தினர்.

ஓட்டல்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் டீக்கடைகள் மூடப்பட்டே இருந்தன. இதனால் சைக்கிள்களில் பலர் கேன்களில் எடுத்துச் சென்று டீ விற்பனையில் ஈடுபட்டனர்.



சென்னையில் பல இடங்களில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கின்போது இதுபோன்று டீ விற்பவர்களை அதிகம் காண முடிந்தது. அந்த வகையில் இன்றும் கேன் டீ விற்பவர்கள் சாலைகளில் சுற்றித்திரிந்தனர். அவர்களிடம் கூட்டம் சேர விடக்கூடாது என்று போலீசார் எச்சரித்தனர்.

முழு ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுறுத்தி இருந்தார். இதன்படி அனைத்து மாவட்டங்களிலும் போலீஸ் சூப்பிரண்டுகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருந்தது. போலீஸ் உயர் அதிகாரிகள் ரோந்து சுற்றி வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை முடுக்கி விட்டனர்.
Tags:    

Similar News