உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

பல்லடம் அருகே வீட்டை உடைத்து கொள்ளை

Published On 2022-01-22 10:11 GMT   |   Update On 2022-01-22 10:11 GMT
செல்லமுத்து கொடுத்த புகாரின் பேரில் அவினாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் நாச்சிபாளையம் டாப்லைட் தோட்டத்தை சேர்ந்தவர் செல்லமுத்து (வயது 55). இவரது மனைவி சுபத்ரா (44). மகன் நிதிஷ் கிருஷ்ணன் (20). 

விறகு கரி வியாபாரியான செல்லமுத்து தனது தந்தை கந்தசாமியின் உடல் நலம் சரி இல்லாததால் அவரை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் அழைத்துச் சென்றுவிட்டார். அவருடன் அவரது மனைவி சுபத்ரா உடன் சென்றுள்ளார்.

மகன் நிதிஷ் கிருஷ்ணன் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று மாலை நிதிஷ் கிருஷ்ணன் கோவையிலிருந்து நாச்சிபாளையத்திற்கு வந்துள்ளார். அப்போது வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது.

உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் உள்பகுதியில் இருந்த பீரோ திறந்து கிடந்துள்ளது. மேலும் அங்கு மிளகாய்ப்பொடி தூவி இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவரது தந்தைக்கு தகவல் தெரிவித்தார். 

உடனடியாக நாச்சிபாளையம் வந்த அவரது தந்தை செல்லமுத்து அவினாசிபாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் உள்ளே சென்று ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த 13 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.1 லட்சம் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. 

செல்லமுத்து கொடுத்த புகாரின் பேரில் அவினாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் தடயங்களை மறைக்க மிளகாய்பொடியை தூவி சென்றுள்ளனர்.

பல்லடம், பொங்கலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளை, குறிவைத்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டி வருகின்றனர். எனவே போலீசார் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News