உள்ளூர் செய்திகள்
யூனியன் அலுவலகம் முன்பு குவிக்கப்பட்டிருந்த போலீசார்

யூனியன் தலைவர், துணைத்தலைவர் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு

Published On 2022-01-21 07:54 GMT   |   Update On 2022-01-21 07:54 GMT
நிலக்கோட்டை யூனியன் தலைவர் மற்றும் துணைத்தலைவர் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது
நிலக்கோட்டை:

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை யூனியன் தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த ரெஜினாநாயகம், துணைத்தலைவராக யாகப்பன் ஆகியோர் உள்ளனர்.

இங்கு மொத்தம் உள்ள 20 உறுப்பினர்களில் 10 பேர் அ.தி.மு.க. ஒருவர் அ.தி.மு.க. ஆதரவாளர், ஒருவர் பா.ம.க., 6 பேர் தி.மு.க., 2 சுயேட்சைகள் உள்ளனர். இதில் பலர் அணி மாறி தி.மு.க. பக்கம் சாய்ந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தலைவர் மற்றும் துணைத்தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். மாவட்ட கலெக்டருக்கும் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது.

உறுப்பினர்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று யூனியன் அலுவலகத்தில் விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து யூனியன் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அணி மாறிய உறுப்பினர்கள் அனைவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கூட்டத்துக்கு வந்தனர். திண்டுக்கல் ஆர்.டி.ஓ. காசி செல்வி தலைமையிலும் தாசில்தார் தனுஷ்கோடி, வட்டார வளர்ச்சி அதிகாரி குணவதி ஆகியோர் மேற்பார்வையிலும் விவாதம் நடைபெற்றது.

அந்த அறைக்குள் பத்திரிகையாளர்கள் உள்பட வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. சுமார் 1 மணி நேர விவாதத்துக்கு பிறகு ஓட்டுப்பெட்டியில் செலுத்தப்படும் வாக்கெடுப்பு போல அனைத்து உறுப்பினர்களுக்கும் ஓட்டுச் சீட்டு அளிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடைபெற்றது.

இவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவியதால் அலுவலக வளாகம் முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
Tags:    

Similar News