உள்ளூர் செய்திகள்
.

பெயிண்டர் கொலையில் ஒரு மாதத்துக்கு பின்னர் சிக்கிய பட்டதாரி வாலிபர்

Published On 2022-01-21 07:39 GMT   |   Update On 2022-01-21 07:39 GMT
சேலம் அருகே நடந்த பெயிண்டர் கொலையில் பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சேலம்,:

சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள நாழிக்கல்பட்டி கிராமம் காந்திநகர் காலனியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 26) பெயிண்டர். இவருடைய மனைவி ரம்யா (20).

கடந்த 17-ந்தேதி திருநாவுக்கரசு கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் உள்ள தனது மாமனார் செல்வகுமாரை, சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வழியனுப்புவதற்காக வந்தபோது 15 பேர் கும்பல் கல்லால் தாக்கினர்.

இதில் பலத்த காயம் அடைந்த  திருநாவுக்கரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கபப்ட்டு இறந்தார்.  இந்த சம்பவம் குறித்து மல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து  நாழிக்கல்பட்டி காந்திநகர் காலனியை சேர்ந்த தமிழன்பன் (35) தங்கவேல் (34) குமரேசன் (32) அழகுமணி (22) கவுதமன் (21) பாலியான் (25), பாலாஜி (20), கோகுல்ராஜ் (22) மற்றும் 17 வயதுடைய 2 சிறுவர்கள் என மொத்தம் 21 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் தொடர்ந்து ஒரு மாத காலமாக நாழிக்கல்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் நவீன்குமார் (21), கார்த்திகேயன்  (22) ஆகிய இருவரும்  பிடிபடாமல் போலீசாருக்கு டிமிக்கி காட்டி வந்தனர்.  இதனால்   டி.எஸ்.பி. தையல் நாயகி தலைமையிலான தனிப்படை அவர்களை பிடிக்க  வியூகம் வகுத்தது.

அதன்படி நாழிக்கல்பட்டி பகுதியில் சாதாரண உடையில் இரவு, பகலாக  போலீசார் கண்காணித்து வந்தனர்.  இந்த நிலையில் நாழிக்கல்பட்டியில் பதுங்கி இருந்து நவீன்குமார், கார்த்திகேயனை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

கைதான கார்த்திகேயன் எம்.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளார். நவீன்குமார் பிளஸ்-2 வரை படித்துள்ளார். வேலைக்கு செல்லாமல் சுற்றித்திரிந்த இருவரும் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

கைதான இருவரையும் போலீசார் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ஓமலூர் கிளை ஜெயிலில் அடைத்தனர்.
Tags:    

Similar News