உள்ளூர் செய்திகள்
கொள்ளை

மதுரையில் பூட்டிய வீட்டில் ரூ.6 லட்சம்- நகை கொள்ளை

Published On 2022-01-21 07:28 GMT   |   Update On 2022-01-21 07:28 GMT
குடும்பத்துடன் பழனிக்கு பாதயாத்திரை சென்றவர் வீட்டில் ரூ.6 லட்சம் பணம் மற்றும் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:

மதுரை செல்லூர் கீழத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் காசிமாயன். லோடுமேனாக வேலை பார்த்து வந்த இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் இறந்துவிட்டார்.

இவருக்கு மேகலா (வயது 37) என்ற மனைவியும், 2 மகன்கள் மற்றும் 19 வயதுடைய ஒரு மகளும் உள்ளனர். ஒரு மகன் தனியார் நிறுவனத்திலும், இன்னொரு மகன் லோடுமேன் ஆகவும் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் காசிமாயன் இன்சூரன்ஸ் பணம் ரூ. 8 லட்சம், கடந்த 10ம் தேதி வங்கி கணக்கிற்கு வந்தது. அந்தப் பணத்தில் 2 லட்சத்தை எடுத்த மேகலா அதனை வைத்து சிறுசிறு கடன்களை அடைத்தார். மீதம் உள்ள 6 லட்சம் ரூபாயை பீரோவில் வைத்து இருந்தார். அந்த பணத்தில் மகளுக்கு நகை வாங்கி திருமண ஏற்பாடுகள் செய்ய மேகலா நினைத்தார்.

அதற்கு முன்பாக பழனிக்கு பாதயாத்திரை சென்று திரும்பிய பிறகு, மகளின் திருமணம் காரியத்தை ஆரம்பிக்கலாம் என்று குடும்பத்தினர் முடிவெடுத்தனர்.

இதனை தொடர்ந்து மேகலா கடந்த 14-ந் தேதி மாலை கதவை பூட்டிவிட்டு பழனிக்கு குடும்பத்துடன் பாதயாத்திரை புறப்பட்டு சென்றார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் முன்கதவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 6 லட்சம் ரூபாய் மற்றும் 1.5 பவுன் நகைகளை கொள்ளையடித்து தப்பினர்.

கடந்த 18ம் தேதி மேகலா வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவை திறந்து பார்த்தபோது ரூ. 6 லட்சம் மற்றும் நகை திருடுபோயிருந்தது தெரிய வந்தது.

இது தொடர்பாக செல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் வேதவல்லி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேகலா வீட்டில் ரூ.6 லட்சம் பணம் இருப்பது கொள்ளையர்களுக்கு எப்படியோ தெரிந்து உள்ளது. எனவே உறவினர்கள் கொள்ளையில் ஈடுபட்டு இருப்பார்களா? அல்லது அண்டை வீட்டில் வசிப்பவர்கள் கைவரிசை காட்டி உள்ளனரா? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News