உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

19ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் - நாளை நடக்கிறது

Published On 2022-01-21 07:19 GMT   |   Update On 2022-01-21 07:19 GMT
மாவட்டத்தில் மொத்தம் 33 லட்சத்து 38 ஆயிரத்து 404 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் ஜனவரி 7-ந்தேதி 18ம் கட்ட தடுப்பூசி முகாம் நடந்தது. அதற்கு அடுத்த வாரம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து 5 நாட்கள் அரசு விடுமுறை என்பதால் கடந்த வாரம் முகாம் நடைபெறவில்லை.

இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை (23-ந் தேதி) முழு ஊரடங்கு  என்பதால் நாளை (22-ந் தேதி) 19ம் கட்ட தடுப்பூசி முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 20 லட்சத்து 201 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 13.36 லட்சம் பேர் இரண்டாம் தவணையும் செலுத்தியுள்ளனர். 2,096 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அவ்வகையில் மாவட்டத்தில் மொத்தம் 33 லட்சத்து 38 ஆயிரத்து 404 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 18 வயதை கடந்த 20.39 லட்சம் பேர் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் நாளை (22-ந் தேதி) மாவட்டத்தில் 19ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது. முதல் தவணை செலுத்தி இரண்டாம் தவணை செலுத்துவதற்கான காலக்கெடு வந்த பின்பும் செலுத்தாமல் உள்ளவர்கள், 18 வயதை கடந்து முதல் தவணை செலுத்தாமல் உள்ளவர் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அழைப்பு விடுத்துள்ளது.

காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது. வழக்கமாக முகாமில் கோவேக்ஷின், கோவிஷீல்டு மட்டுமே செலுத்தப்படும் நிலையில் இன்றைய முகாமில் ‘பூஸ்டர்’ தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது.

ஒவ்வொரு வாரமும் வியாழன்தோறும் பூஸ்டர் தடுப்பூசிக்கென தொடர்ந்து முகாம் நடக்கும். இருப்பினும் மாற்றாக சனிக்கிழமை நடக்கும் மெகா முகாம்களிலும் முன்கள பணியாளர், 60 வயதை கடந்தவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

திருப்பூர் மாநகராட்சி, புறநகர் உள்ளிட்ட 67 இடங்களில் நேற்று ‘பூஸ்டர்’ தடுப்பூசிக்கான சிறப்பு முகாம் நடந்தது. நேற்று 386 பேருக்கு ‘பூஸ்டர்’ தடுப்பூசி செலுத்தப்பட்டது. மாவட்டத்தில் இதுவரை 2,096 பேருக்கு ‘பூஸ்டர்’ தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் ‘பூஸ்டர்’ தடுப்பூசி செலுத்துவதற்கு சுகாதார பணியாளர் 12 ஆயிரத்து 400 பேர், முன்கள பணியாளர் 37 ஆயிரம் பேர் தகுதி வாய்ந்தவர்களாக உள்ள போதும் இவர்களுக்கான காலக்கெடு (இரண்டாவது தவணை முடிந்து 273 நாட்கள்) வராததால் பலரும் நேற்று தடுப்பூசி செலுத்த வரவில்லை. 

386 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டது. அடுத்த வாரம் வியாழக்கிழமையும் பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News