உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

திருப்பூர் மாவட்டத்தில் தொடர் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சி

Published On 2022-01-21 07:03 GMT   |   Update On 2022-01-21 07:03 GMT
பாட்டிலில் மீதமிருந்த பெட்ரோலை விஜயராணி மீது ஊற்றி ‘வெளியே சொன்னால் கொன்று விடுவேன்’ என மர்மஆசாமி மிரட்டியுள்ளார்.
வெள்ளகோவில்:

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் மூலனூர் ரோட்டில் சொரியன் கிணற்றுபாளையம் பிரிவில் வசிப்பவர் பழனிசாமி (வயது 75). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மனைவி விஜயராணி(56). மகள், மகன் இருவரும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர்.

நேற்று மதியம் 45 வயது மதிக்கத்தக்க ஆசாமி ஒருவர் வீட்டினுள் பெட்ரோல் பாட்டிலுடன் நுழைந்து பழனிச்சாமி மீது ஊற்றி, ‘பணம், நகையை எடுத்துக்கொடு’ என மிரட்டியுள்ளார். வீட்டின் மேல் மாடியில் இருந்த மனைவி விஜயராணி சத்தம்கேட்டு கீழே வந்துள்ளார்.

அப்போது பாட்டிலில் மீதமிருந்த பெட்ரோலை விஜயராணி மீது ஊற்றி ‘வெளியே சொன்னால் கொன்று விடுவேன்’ என மிரட்டியுள்ளார். பழனிசாமி வீட்டினுள் தாழிட்டு ஜன்னலைத் திறந்து சத்தம் போட, அக்கம்பக்கத்தினர் வந்தனர்.

அதற்குள் வெளியே தயாராக நின்ற வாலிபருடன் சேர்ந்து அந்த ஆசாமி பைக்கில் தப்பிவிட்டார். வெள்ளகோவில் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் வழக்கு பதிந்து பட்டப்பகலில் பெட்ரோல் ஊற்றி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

ஈரோடு சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 18). திருப்பூர் சாமளாபுரத்தில் தங்கி பல்லடம் செம்மிபாளையத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

பெத்தாபூச்சிபாளையம், அய்யன் நகர் அருகில் சென்ற போது திடீரென 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்தது. தொடர்ந்து மறைத்து வைத்திருந்த கட்டையால் அரவிந்தை தாக்கினர். அவரை காட்டுப்பகுதிக்கு தூக்கி சென்று கையை கட்டி வாயில் ‘பிளாஸ்டர்’ ஒட்டி பணம் கேட்டு மிரட்டினர். 

அரவிந்திடம் இருந்த செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். அங்கிருந்து தப்பிய அவர் மங்கலம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் 3 பேரை தேடி வருகின்றனர்.

அவிநாசி காமராஜ் நகர், ஜெய்சக்தி அவென்யூ பகுதியில் வசிப்பவர் வனஜா. கருக்கன்காட்டு புதூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். வழக்கம்போல் பள்ளி முடிந்து நேற்று மாலை காமராஜ்நகர் பஸ் நிறுத்தத்தில் இறங்கி காமராஜ்நகர் வீதி வழியாக நடந்து வந்துக் கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் வனஜா அணிந்திருந்த தாலியுடன் கூடிய செயின், கருகமணி செயின் என 5 சவரனை பறித்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். புகாரின் பேரில் அவிநாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே அதனை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.     
Tags:    

Similar News