உள்ளூர் செய்திகள்
வெறிச்சோடிய சாலை

தமிழகத்தில் நாளை மறுநாள் முழு ஊரடங்கு அமல்?

Published On 2022-01-21 06:22 GMT   |   Update On 2022-01-21 07:41 GMT
தமிழகத்தில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு நடைபெறுமா? என்பது குறித்த கேள்வி அரசு அதிகாரிகள், வியாபாரிகள், வர்த்தக பிரமுகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கடந்த 7-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது.

பொதுமக்களின் நலன் கருதி பால் மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பொது ஊரடங்கு கடந்த 9-ந்தேதி மற்றும் 16-ந்தேதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அன்றைய தினம் பொது போக்குவரத்தான பஸ், ஆட்டோ, கார் போன்ற வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

நீண்ட தூரம் செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையும், சென்னையில் மின்சார ரெயில் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.

தற்போது இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையிலும் 2 முழு ஊரடங்கை அமல்படுத்தப்பட்ட நிலையிலும் தமிழகத்தில் தொற்று பரவல் எதிர்பார்த்த அளவு குறையவில்லை.

சென்னையில் தொற்று சற்று குறைய தொடங்கியுள்ளது. ஆனால் மற்ற மாவட்டங்களில் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

இந்த நிலையில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு நடைபெறுமா? என்பது குறித்த கேள்வி அரசு அதிகாரிகள், வியாபாரிகள், வர்த்தக பிரமுகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த மாதம் 31-ந்தேதி வரை பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ள நிலையில் 23-ந்தேதி முழு ஊரடங்கு பற்றி எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை.



இதனால் அரசின் பல்வேறு அத்தியாவசியதுறைச் சார்ந்த அதிகாரிகள் முழு ஊரடங்கு நாளை மறுநாள் நடைபெறுமா? என்ற சந்தேகத்தில் உள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று குறையவில்லை. அதனால் நாளை மறுநாள் முழு ஊரடங்கு அமல்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து அரசு இன்று அல்லது நாளை அறிவிப்பை வெளியிடும்” என்று தெரிவித்தனர்.

முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்துவது குறித்து நாளை மீண்டும் ஆலோசித்து அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News