ஆந்திரா மாநிலத்தில் இருந்து தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு அதிகளவில் தக்காளி வரத்து வந்தது. இதனால் தக்காளி விலை கடுமையாக சரிந்தது.
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அதிகளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதனால் தமிழக எல்லையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை முதல் இடத்திலும், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு 2-வது இடத்திலும் உள்ளன. இங்கிருந்து சென்னை, கோவை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கேரளாவுக்கும் அதிகளவில் தக்காளி விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
கடந்தாண்டு நவம்பர் மாதம் பெய்த கனமழையால் ஒரு கிலோ தக்காளி ரூ.100-ஐ தாண்டி விற்றது. தொடர்ந்து விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது. கிலோ ரூ.160 வரைக்கும் விற்கப்பட்டது. இதனால் ஓட்டல் உரிமையாளர்கள், இல்லத்தரசிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.
இந்த நிலையில் தக்காளி விலை சிறிதுசிறிதாக விலை சரிந்து வந்தது. கடந்த வாரம் பொங்கல் பண்டிகையின் போது ஒரு கிலோ தக்காளி ரூ.60 முதல் 70 வரை விற்பனையானது.
இந்த நிலையில் ஆந்திரா மாநிலத்தில் இருந்து தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு அதிகளவில் தக்காளி வரத்து வந்தது. இதனால் தக்காளி விலை கடுமையாக சரிந்தது.
தற்போது ராயக்கோட்டை, பாலக்கோடு மார்க்கெட்டுகளில் தக்காளி கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
இதற்கிடையே தற்போது விவசாயிகள் அதிகளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருவதால் விலை மேலும் குறையும் என தருமபுரி மாவட்ட விவசாயிகள் தெரிவித்தனர்.