சாத்தான்குளம் அருகே உள்ள அமுதுன்னாகுடியை சேர்ந்த முதியவர் ஒருவர் குளத்திற்கு மீன் பிடிக்க சென்ற இடத்தில் தவறி விழுந்து மூழ்கி பலியானார்.
சாத்தான்குளத்தில் குளத்தில் மூழ்கி முதியவர் பலி
பதிவு: ஜனவரி 20, 2022 16:28 IST
ராஜகோபால் உடலை தீயணைப்பு துறையினர் மீட்ட காட்சி.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே உள்ள அமுதுன்னாக்குடியை சேர்ந்தவர் ராஜகோபால்(வயது 60). இவர் அங்குள்ள பெரியகுளத்தில் மீன் பிடிப்பதற்காக நேற்று முன்தினம் குளத்தில் வலை விரித்து இருந்தார்.
நேற்று காலை வலையில் மீன் சிக்கி உள்ளதா என்பதை பார்ப்பதற்காக குளத்தில் இறங்கிய அவர் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டார். இதனால் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
நீண்டநேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் குளத்திற்கு வந்து பார்த்தபோது அவரை காணவில்லை. உடனே சாத்தான்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவிக் கப்பட்டது.தீயணைப்பு நிலைய அலுவலர் மாரியப்பன் தலைமையில் வீரர்கள் வந்து குளத்தில் தேடி பார்த்தனர்.ஆனால் அவர் உடலை மீட்க முடியவில்லை.
இன்று காலை 2-வது நாளாக தேடி பார்த்தனர். அப்போது ராஜகோபால் உடலை மீட்டனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்.