உள்ளூர் செய்திகள்
திருப்பூரில் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்ட காட்சி.

பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம் - 77 மையங்களில் நடந்தது

Published On 2022-01-20 09:19 GMT   |   Update On 2022-01-20 09:19 GMT
மாவட்டத்தில் முதன்முறையாக பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் 19 லட்சத்து 97 ஆயிரத்து 615 பேர் கொரோனா முதல் தவணை தடுப்பூசியும், 13 லட்சத்து 33 ஆயிரத்து 986 பேர் 2வதுதவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். 3-வது அலையில் இருந்து தற்காத்துக் கொள்ள தடுப்பூசி கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டுமென சுகாதாரத்துறை அறிவுறுத்தியது.

2 தவணை தடுப்பூசியும் செலுத்தியவர்களுக்கு கூடுதல் தடுப்பூசியாக ‘பூஸ்டர்’ தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 1,655 பேர் ‘பூஸ்டர்’ தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இந்தநிலையில் மாவட்டத்தில் முதன்முறையாக பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. 

வாரம்தோறும் வியாழக்கிழமைகளில் இந்த முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு தலைமை மருத்துவமனை என 77 மையங்களில் முகாம் நடைபெற்றது.

இதுகுறித்து கலெக்டர் வினீத் கூறுகையில்:

திருப்பூர் மாவட்டத்தில் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் 9 மாதங்கள் அல்லது 39 வாரங்களுக்கு பிறகு பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். 

முதல்கட்டமாக, முன்கள பணியாளர், சுகாதார பணியாளர் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் ‘பூஸ்டர்’ தடுப்பூசி செலுத்தப்படுகிறது.’கோவிஷீல்டு’ அல்லது ‘கோவாக்சின்’ தடுப்பூசி செலுத்தியவர்கள் அந்தந்த மருந்துகளிலேயே பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட 3 லட்சத்து 59 ஆயிரத்து 200 பேர், சுகாதார பணியாளர் 12 ஆயிரத்து 400 பேர், முன்கள பணியாளர் 37 ஆயிரம் பேர் என 4 லட்சத்து 8 ஆயிரத்து 600 பேருக்கு முதல்கட்டமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.
Tags:    

Similar News