உள்ளூர் செய்திகள்
மழை

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழை- அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து

Published On 2022-01-20 05:01 GMT   |   Update On 2022-01-20 05:01 GMT
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து ஆங்காங்கே சாரல் மழை பெய்து வருகிறது.

நெல்லை:

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை, வழக்கத்தைவிட அதிக அளவில் பெய்துள்ளது.

தற்போது மழைக்காலம் முடிந்து பனிக்காலம் தொடங்கி உள்ளது. ஆனாலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து ஆங்காங்கே சாரல் மழை பெய்து வருகிறது.

கடந்த 17-ந் தேதி கருப்பாநதி அணைப்பகுதியில் 34 மில்லிமீட்டர் மழைபெய்தது. இந்தநிலையில் நேற்று அடவிநயினார் அணைப்பகுதியில் 9 மில்லிமீட்டரும், கருப்பாநதி அணைப்பகுதியில் 2 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

மேலும் அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து உள்ளது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 360 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்காக விநாடிக்கு 905 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று காலை 127.70 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 134.32 அடியாக உள்ளது.

மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 73 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 310 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 116.15 அடியாக உள்ளது.

இதுபோல கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, நம்பியாறு, கொடுமுடியாறு ஆகிய அணைகளுக்கும் குறைந்த அளவில் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. மேற்கண்ட அணைகளில் இருந்தும் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

Tags:    

Similar News