உள்ளூர் செய்திகள்
கொரோனா வைரஸ் மாதிரி

தேனி மாவட்டத்தில் கொரோனா பரவல் 30 சதவீதம் உயர்வு

Published On 2022-01-19 08:29 GMT   |   Update On 2022-01-19 08:29 GMT
தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனா பரவலின் வேகம் 30 சதவீதமாக உயர்ந்துள்ளது
தேனி:

தமிழகத்தில் கொரோனா 3ம் அலை ஜனவரி முதல் தேதியில் இருந்து வேகமெடுத்து வருகிறது. டெல்டா, ஒமைக்ரான் தொற்று உயர்ந்து வரும் அதே வேகத்தில் கொரோனாவின் வீரியமும் அதிகமாக உள்ளது.

தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் கேரள மாநிலத்துக்கு ஏலக்காய், காபி தோட்டங்களுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர்.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்த போது, இவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது மாநில எல்லைகளில் எந்தவித சோதனையும் நடத்தப் படாததால் தொழிலாளர்கள் தினசரி பணிக்கு சென்று வருகின்றனர்.

இது மட்டுமின்றி பண்டிகை நாட்களில் மக்கள் கொரோனா விதிகளை பின்பற்றாமல் அதிக அளவு கூட்டமாக கலந்து கொண்டனர். கடந்த 1 வாரத்துக்கு முன்பு தொற்று பரவல் 0.4 சதவீதமாக மட்டுமே இருந்தது.

தற்போது 30 சதவீதமாக அதிகரித்துள்ளது. 100 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்தால் அதில் 30 பேருக்கு உறுதியாக தொற்று கண்டறியப் படுகிறது. நேற்று ஒரே நாளில் 285 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று முன்தினம் 331 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் அதன் தீவிரம் குறையாமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மற்ற மாவட்டங்களை ஒப்பிடும் போது தேனி மாவட்டத்தில் தடுப்பூசி இன்னும் முழுமையாக தீவிரப்படுத்தப்படவில்லை என்பதும் இதற்கு ஒரு காரணமாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக் கின்றனர்.

மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1335 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில் பலர் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளிலும் வீட்டு தனிமையிலும் உள்ளனர்.

கொரோனாவால் உயிரிழப்பு இல்லை என்பது மட்டுமே தற்போது வரை ஆறுதலான செய்தியாக உள்ளது. இருந்தபோதும், தொற்று பரவலை குறைக்க மேலும் மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
Tags:    

Similar News