உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

அலகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடை

Published On 2022-01-19 07:45 GMT   |   Update On 2022-01-19 07:45 GMT
இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள் செய்து வந்தனர்.
திருப்பூர்:

திருப்பூர் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கம் சார்பில் ஆண்டுதோறும் அலகுமலையில் ஜல்லிக்கட்டு திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. 

தமிழகத்திற்கே முன்னுதாரணமாக காளைகள் மற்றும் வீரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு பொதுமக்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் கேலரி அமைக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் நடத்தப்படுகிறது. ஜல்லிக்கட்டுக்காக உள்ளூரில் நாட்டு மாட்டு காளைகள் வளர்ப்பதும் அதிகரித்தது.

இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள் செய்து வந்தனர். இந்நிலையில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி அலகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்க தலைவர் பழனிசாமி கூறுகையில்: 

சட்டம் ஒழுங்கு பிரச்சினை இருப்பதாக கூறி அலகுமலை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ஜல்லிக்கட்டு விழா நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. எங்களை மாதப்பூரில் நடத்த ஆர்.டி.ஓ., அறிவுறுத்தினார். 

வேறு ஊரில் நடத்தினால் அங்கு உள்ளூர் மக்களின் ஆதரவு எந்தளவு இருக்கும் என்பது தெரியாது. வெளியூர் சென்று நடத்தினால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை திருமங்கலத்தில் நடத்த முடியாது. 

அதேபோல அலகு மலை ஜல்லிக்கட்டை மாதப்பூரில் நடத்துவது சிரமம். அலகு மலையில் ஜல்லிக்கட்டு நடத்த எங்களுக்கு அனுமதி தராவிட்டால் அரசு வேறு அமைப்புகளை கொண்டு மாதப்பூரில் நடத்தட்டும் என்றார்.
Tags:    

Similar News