உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

கொரோனா பணி- மருத்துவ பணியாளர்கள் நியமனம் தீவிரம்

Published On 2022-01-19 07:42 GMT   |   Update On 2022-01-19 07:42 GMT
நோய் தொற்று பாதித்த நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும் 3 நாட்களில் குணமடைந்து வீடு திரும்புகின்றனர்.
உடுமலை:

உடுமலை நகரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை  கணிசமாக உயர்ந்து வருகிறது. தொற்று அறிகுறி உள்ளவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வருகின்றனர். 

அவ்வகையில் உடுமலை அரசு மருத்துவமனையில், 6 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சந்தேகத்தின்பேரில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில்  40 பேர் உள்ளனர்.அதேநேரம் மருத்துவமனையில், ஒரு டாக்டர், ஒரு செவிலியர் கண்காணிப்பாளர், 8 செவலியர்கள் உட்பட 10 பேர்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சையில் உள்ளனர்.

இதுகுறித்து மருத்துவ பணிகள் துறையினர் கூறியதாவது:-

நோய் தொற்று பாதித்த நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும் 3 நாட்களில் குணமடைந்து வீடு திரும்புகின்றனர். மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தொற்று ஏற்படுவதை தவிர்க்க உரிய ஆலோசனை அளிக்கப்பட்டு வருகிறது. 

அதேநேரம் நோய்த்தொற்று அதிகரிப்பதால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது. இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களும் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்த முனைப்பு காட்டுகின்றனர். ஒரே நாளில் 150-க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்தநிலையில் கொரோனா 3-வது அலை தொடங்கி ஒவ்வொரு மாவட்டத்திலும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக டாக்டர், செவிலியர், ‘அனஸ்தீசீயா டெக்னீசியன்’, ‘லேப் டெக்னீசியன்’, ‘ரேடியோகிராபர்’, ‘பயோ மெடிக்கல்’ என்ஜினீயர்  உள்ளிட்டவர்களை தேர்வு செய்து தற்காலிக பணியில் நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்திலும் கொரோனா சிகிச்சைக்காக அதிகமானோர் அனுமதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு மருத்துவ கல்லூரிக்கு கூடுதல் டாக்டர், செவிலியர் உள்ளிட்ட பணியிடம் நிரப்ப தேவையான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இதுகுறித்து அறிவிப்பு வெளியிடப்பட்ட போது டாக்டர் தவிர பிற பணிகளுக்கு வர பலரும் தயக்கம் காட்டுகின்றனர். ஏற்கனவே விண்ணப்பித்து காத்திருப்பவர்களை போனில் அழைக்கின்றனர். 

ஆனால் கொரோனா பணிக்கு வர பலரும் தயக்கம் காட்டுகின்றனர். எப்படி ஊழியர்களை நியமிப்பது என்பது தெரியாமல் மருத்துவமனை நிர்வாகம் தடுமாறுகிறது. 

மருத்துவ கல்லூரி வட்டாரத்தில் விசாரித்த போது, ‘டாக்டருக்கு ரூ. 60 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது. செவிலியர், லேப் உள்ளிட்ட பிற பணிகளுக்கு ரூ.15 ஆயிரம் மாத ஊதியம். ஒரு மாதம் மட்டுமே பணி. அதன் பின் சூழலை பொறுத்து தொடர்வது குறித்து தெரிவிக்கப்படும் என்பதை முன்பே தெரிவித்து விடுகின்றனர். 

குறைந்த பட்சம் 6 மாத பணி என்றால் கூட பணியாற்ற வருவர். ஒரு மாதம் என்பதால் ஏற்கனவே பணிபுரியும் இடத்தில் இருந்து இங்கு வந்தால் மீண்டும் ஒரு மாதம் கழித்து அப்பணியில் இணைய முடியாது. தவிர தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் சம்பளம் வழங்கப்படும் நிலையில் அரசு மருத்துவ கல்லூரியில் வழங்கப்படும் ஊதியம் குறைவாக இருப்பதால் கொரோனா வார்டு பணிக்கு யாரும் முன்வருவதில்லை என்றனர்.  
Tags:    

Similar News