உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

2ம் தவணை தடுப்பூசி - திருப்பூர் மாவட்டம் 13ம் இடம்

Published On 2022-01-19 07:34 GMT   |   Update On 2022-01-19 07:34 GMT
முதல் தவணை தடுப்பூசி செலுத்திய 45 முதல் 60 வயதுக்கு மேற்பட்ட பலர் இரண்டாம் தவணை தடுப்பூசி இன்னமும் செலுத்தாமல் உள்ளனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் 16-ந் தேதி மருத்துவ மற்றும் சுகாதார பணியாளர்களுக்கும் பிப்ரவரி முதல் வாரத்தில் முன்கள பணியாளருக்கும், மார்ச், 1 மற்றும் ஏப்ரல் 1 முறையே 60 வயது மற்றும் 45 வயதை கடந்தவருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 

மே இரண்டாவது வாரம் முதல் 18 வயதை கடந்தவருக்கு கோவேக்ஷின், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை 19 லட்சத்து 95 ஆயிரத்து 400 பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசியை 13 லட்சத்து 46 ஆயிரத்து 821 பேரும் செலுத்தியுள்ளனர்.

இதுவரை நடந்த 18 மெகா தடுப்பூசி முகாம்களில் 18 வயதை கடந்த 50 வயதுக்கு உட்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டியுள்ளனர்.

முதல் தவணை தடுப்பூசி செலுத்திய 45 முதல் 60 வயதுக்கு மேற்பட்ட பலர் இரண்டாம் தவணை தடுப்பூசி இன்னமும் செலுத்தாமல் உள்ளனர். 

அனைத்து மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாலுகா அரசு மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரி, 24 மணி நேர தடுப்பூசி மையம் உள்ளிட்ட இடங்களில் தினசரி தடுப்பூசி செலுத்தப்பட்ட போதும் பலரும் ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.

பொது சுகாதாரத்துறை இயக்குனரகம், கொரோனா மூன்றாவது அலை இணைநோய் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களை அதிகளவில் பாதிக்கிறது. 

குறிப்பாக இரண்டு தவணை தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொள்ளாதவர் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என எடுத்துரைத்த போதும் பலர் இதுகுறித்து விழிப்புணர்வுடன் இருப்பதில்லை. மாவட்ட சுகாதாரத்துறை தரப்பில் வீடு, வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டும் வருகிறது.

பொங்கல் தொடர் விடுமுறை காரணமாக நடப்பு வாரம் மெகா தடுப்பூசி முகாம் நடக்காத நிலையில் கடந்த 16-ந் தேதி தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில்:

முதல் தவணை தடுப்பூசி செலுத்துவதில் திருப்பூர் மாவட்டம் மாநில அளவில் 95.57 சதவீதத்துடன் 6-வது இடத்தில் உள்ளது. இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்துவதில் 67.50 சதவீதத்துடன் 13வது இடத்தில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருகில் உள்ள கோவை, நீலகிரி மாவட்டங்கள் தடுப்பூசி செலுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தி வரும் நிலையில் திருப்பூர் 13வது இடத்தில் இருப்பது மாவட்ட சுகாதாரத்துறையினரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
Tags:    

Similar News