உள்ளூர் செய்திகள்
குடோனுக்குள் வலம் வரும் சிறுத்தை

3வது நாளாக கூண்டுக்குள் சிக்காமல் போக்கு காட்டும் சிறுத்தை- 6 கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு

Published On 2022-01-19 05:04 GMT   |   Update On 2022-01-19 05:04 GMT
3-வது நாளாக வனசரக அலுவலர் தினேஷ்குமார், ரேஞ்சர் சந்தியா தலைமையிலான 20-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
குனியமுத்தூர்:

கோவையை அடுத்த மதுக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக சிறுத்தை நடமாட்டம் உள்ளது. அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் சிறுத்தை தெருநாய்களை அடித்து கொன்று மக்களை அச்சறுத்தி வருகிறது.

இந்த நிலையில் குனியமுத்தூர் பி.கே.புதூர் பகுதியில் உள்ள தனியார் குடோனுக்குள் சிறுத்தை நேற்றுமுன்தினம் புகுந்தது. தகவல் அறிந்ததும் உயர் வன அதிகாரிகள் தலைமையில் 40-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் குடோன் பகுதிக்கு வந்து சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

சிறுத்தை குடோனை விட்டு வெளியில் தப்பித்து செல்லாமல் இருக்க குடோனை சுற்றிலும் 3 கூண்டுகள் வைக்கப்பட்டன. அதன் மேல் பகுதிகளில் வலைகளை விரித்தும் அதனை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

3 கூண்டுகளிலும் இறைச்சியை வைத்து சிறுத்தை சிக்கும் என காத்திருக்கின்றனர். ஆனால் சிறுத்தை கறியை சாப்பிட கூண்டிற்குள் வரவில்லை. இதையடுத்து சிறுத்தையின் நடமாட்டம் குடோனுக்குள் இருக்கிறதா என்பதை அறிய முதலில் ஒரு கேமராவை பொருத்தினர்.

அதன் மூலம் சிறுத்தை கூண்டு இருக்கும் பகுதிக்குள் செல்கிறதா என பார்த்து கொண்டிருந்தனர். ஆனால் சிறுத்தை இருந்த இடத்தை விட்டு நகரவில்லை.

நேற்று 2-வது நாளாக வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் இறங்கினர். பட்டாசு வெடித்தும் அதனை வெளியில் கொண்டு வருவதற்கான முயற்சியையும் வனத்துறையினர் மேற்கொண்டனர். ஆனால் அதுவும் அவர்களுக்கு கைகொடுக்கவில்லை. மேலும் டிரோன் கேமரா பறக்கவிட்டும் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்தனர். ஆனால் டிரோன் கேமரா கட்டிடத்தில் இருந்த பழைய கழிவுகளில் மாட்டிக்கொண்டது. இதனால் கேமராவை எடுக்க முடியவில்லை.

இதையடுத்து நேற்று இரவு கூடுதலாக குடோனுக்குள் 5 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர். தொடர்ந்து கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து, சிறுத்தையின் நடமாட்டத்தை பார்த்து கொண்டே இருந்தனர்.

மேலும் முதலில் சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக கால்நடை டாக்டர்கள் சுகுமார், ராஜேஷ்குமார் ஆகியோரும் வரவழைக்கப்பட்டனர். அவர்களும் வனத்துறையினருடன் இணைந்து சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் மயக்க ஊசி செலுத்தும் திட்டத்தை கைவிட்ட வனத்துறையினர் சிறுத்தையை உயிருடன் பிடிக்க முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இரவு, பகல் பாராமல் 24 மணி நேரமும் சிறுத்தையின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

இன்று 3-வது நாளாக வனசரக அலுவலர் தினேஷ்குமார், ரேஞ்சர் சந்தியா தலைமையிலான 20-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சிறுத்தையை பிடிப்பதற்காக பல்வேறு கட்ட நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் சிறுத்தையோ 3 நாட்களை கடந்தும் வனத்துறையினர் வைத்துள்ள கூண்டில் சிக்காமல் போக்குகாட்டி வருகிறது.

மேலும் கூண்டு இருக்கக்கூடிய பக்கம் கூட போகாமல் குடோனில் இருக்கக்கூடிய ஒவ்வொரு அறைக்கும் விருந்தினர் போல ஹாயாக நடந்து செல்கிறது. இன்று காலை வனத்துறையினர் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, இன்று அதிகாலை சிறுத்தை தான் இருக்க கூடிய அறையில் இருந்து மற்றொரு அறைக்கு செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகள் அனைத்தும் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தற்போது சிறுத்தை பதுங்கி இருக்கக்கூடிய குடோன் முழுவதும் வனத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கூடிய விரைவில் சிறுத்தையை பிடித்து விடுவோம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குடோனில் பதுங்கியுள்ள சிறுத்தை ஏற்கனவே குடியிருப்பு பகுதிகளுக்குள் சுற்றி திரிந்து நாய்களை அடித்து வேட்டையாடி உள்ளது. பாழடைந்த குடோனில் பதுங்கி இருப்பதால் சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதில் சிக்கல் உள்ளது. எனவே சிறுத்தையை உயிருடன் பிடிக்கவே முடிவு செய்துள்ளோம். அதற்காக குடோனில் வைக்கப்பட்டுள்ள 3 கூண்டுகளில் ஒரு கூண்டில் நாய் ஒன்றை கட்டி வைத்து காத்திருக்கிறோம்.

பொதுவாக சிறுத்தை 2 முதல் 3 நாட்களுக்கு உணவு எடுத்து கொள்ளாமல் இருக்கும். குடோனில் உள்ள சிறுத்தையும் 2 நாட்களாக எதுவும் சாப்பிடவில்லை. இன்னும் சில தினங்களில் உணவு தேடி சிறுத்தை சோர்வடைந்து எப்படியும் கூண்டிற்குள் சென்று இறைச்சியை சாப்பிட வாய்ப்புள்ளது. அப்போது சிறுத்தையை உயிருடன் பிடித்து விடுவோம். பிடித்த பின் சிறுத்தையின் உடல் நலத்தை கால்நடை டாக்டர்கள் கண்காணித்த பின் அடர்ந்த வனத்திற்குள் விட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News