உள்ளூர் செய்திகள்
கைது

செஞ்சியில் மளிகை கடையில் பதுக்கிய குட்கா பறிமுதல்- வியாபாரி கைது

Published On 2022-01-18 10:47 GMT   |   Update On 2022-01-18 10:47 GMT
நாட்டார்மங்கலத்தில் உள்ள ஒரு மளிகைக்கடையில் சோதனையிட்டபோது அங்கு விற்பனைக்காக ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம், மணல் கடத்தல், ஒரு நம்பர் லாட்டரி சீட்டுவிற்பனை மற்றும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனையை  கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் ஒரு தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நகரில் ஒரு மளிகைக் கடையில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தனிப் பிரிவிற்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் செஞ்சி நகரப்பகுதியில் உள்ள கடைகளை ஆய்வு செய்ய போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவிட்டார்.

அதனடிப்படையில் செஞ்சி சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் நாட்டார்மங்கலத்தில் உள்ள ஒரு மளிகைக் கடையில் சோதனையிட்டபோது அங்கு விற்பனைக்காக ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து செஞ்சி போலீசார் மளிகை கடை உரிமையாளர் லட்சுமணன் (வயது 30) மீது வழக்கு பதிவு செய்து அவரை  கைது செய்தனர். மேலும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதை புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News