உள்ளூர் செய்திகள்
கே.எஸ்.அழகிரி

தமிழக அரசால் கொண்டு வரப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தர கவர்னர் காலம் தாழ்த்துவதா?- கே.எஸ்.அழகிரி கண்டனம்

Published On 2022-01-18 09:35 GMT   |   Update On 2022-01-18 09:35 GMT
மாநில அரசின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஆளுநர், அந்த மாநில மக்களின் நலன் சார்ந்த மசோதாவுக்கு ஒப்புதல் தருவது தான் நியாயமானதாகவும் முறையானதாகவும் இருக்கும் என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் சட்டங்களுக்குக் குறிப்பிட்ட காலத்துக்குள் ஒப்புதல் தராமல் இழுத்தடிக்கும் போக்கை ஆளுநர் மூலம் மத்திய பா.ஜ.க. அரசு செய்து வருகிறது.

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதா குறித்து ஆளுநர் முடிவு எடுப்பதற்குக் காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் பி.வில்சனும் கோரிக்கை வைத்திருக்கிறார். காலம் தாழ்த்தும் ஆளுநரின் செயல் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாநில அரசின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஆளுநர், அந்த மாநில மக்களின் நலன் சார்ந்த மசோதாவுக்கு ஒப்புதல் தருவது தான் நியாயமானதாகவும் முறையானதாகவும் இருக்கும்.

மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவதில் ஆளுநர் எத்தகைய வரையறையை பின்பற்றுகிறார் என்ற கேள்விக்குப் பதில் இல்லை. தமிழக சட்டப்பேரவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பாலான உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் தர மறுப்பது தமிழகத்தின் இறையாண்மைக்கும், மக்களின் விருப்பத்திற்கும் நேர் எதிரானதாகும். இதன்மூலம் மத்திய பா.ஜ.க. அரசின் தமிழக விரோத போக்கிற்கு ஆளுநர் துணை போகிறார்.

அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக மாநில அரசின் அதிகாரங்களை பறிக்கின்ற வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் மூலம் செயல்பட்டு வருகிறது. இத்தகைய போக்குகள் மூலம் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகள் ஜனநாயக முறையில் கடுமையான போராட்டத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News