அனைத்து தரப்பிலும் நாம் மேம்பட்டவர்களாக மாற ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு முனைப்போடு இருப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக முன்னேற்றத்திற்கு ஆக்கபூர்வமான ஆலோசனை வழங்க வேண்டும் - திட்டக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
பதிவு: ஜனவரி 18, 2022 14:15 IST
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை:
சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள மாநிலத் திட்டக்குழு அலுவலகத்தில் இன்று மாநிலத் திட்டக்குழு ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் தெரிவித்துள்ளதாவது:
புதிய அரசு பொறுப்பேற்றதும் மாநில திட்டக் குழுவை புதிதாக அமைத்தோம். பேராசிரியர் ஜெயரஞ்சன் உள்ளிட்ட பல்துறையைச் சேர்ந்தவர்கள் இக்குழுவில் இடம்பெற்றீர்கள். உங்கள் அனைவரது பணியும் கடந்த ஆறு மாத காலமாக ஆக்கபூர்வமாக அமைந்து வருவதை எண்ணி உண்மையில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஆக்கப்பூர்வமான பல ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் நீங்கள் வழங்கி வருகிறீர்கள் என்பதை நான் அறிவேன். இதே உற்சாகத்தோடு நீங்கள் அனைவரும் பணியாற்ற வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். உங்களது பணி என்பது மிகமிக முக்கியமானது. உங்களிடம் இருந்தும் இன்னும் கூடுதலாக பல்வேறு வழிகாட்டுதல்கள் எங்களுக்கு வேண்டும் என்பதைச் சொல்வதற்காகத்தான் நான் இங்கு வந்துள்ளேன்.
மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவைச் சார்ந்த நீங்கள் அரசுக்கு பல்வேறு ஆலோசனைகளைச் சொல்கிறீர்கள். இது போன்று செய்யலாம் , அது போல திட்டமிடலாம் - என்று உங்களிடம் இருந்து ஆலோசனைகள் எங்களுக்கு வருகின்றன. உங்களிடம் இருந்து வரும் எண்ணங்கள், ஆலோசனைகளாக மட்டுமில்லாமல், அந்த எண்ணம் குறித்த முழுமையான செயல்வ டிவமாக எங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். புதிய புதிய எண்ணங்கள் உங்களுக்குத் தோன்றலாம். அந்த எண்ணம் குறித்து அது பற்றிய வல்லுநர் குழுவுடன் நீங்களே ஆலோசனை நடத்தலாம். குறிப்பிட்ட தொழிற்சாலைகளுக்கு நீங்களே போய் பார்க்கலாம். அதன் நீள அகலங்கள் அனைத்தையும் நீங்களே தெரிந்து கொள்ளலாம். அதன் பிறகு அவற்றை மேம்படுத்த அதனை அரசுக்கு உங்களது திட்ட அறிக்கையாக நீங்கள் வழங்கலாம். அதாவது ஒரு ஆலோசனையை நீங்கள் சொல்லும் போது அதன் ஏ டூ இசட் அனைத்தையும் நீங்களே அலசி ஆராய்ந்து எங்களுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அதற்கு துறை வாரியான வல்லுநர்களை நீங்கள் சந்திக்கலாம். கலந்துரையாடல் நடத்தலாம். வெளிமாவட்டங்களுக்குச் சென்று நீங்களே விவசாயிகளை, தொழிலதிபர்களை, இளைஞர்களை சந்திக்கலாம். அவர்களது ஆலோசனையையும் பெறலாம். இவ்வாறான செயல்முறைத் திட்டங்களோடு நீங்கள் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மிக முக்கியமான ஆலோசனையாக இருந்தால் அது குறித்த முழுமையான பரிசீலனைக்குப் பிறகு நீங்கள் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தமிழகம் பல்வேறு வகைகளில் முன்னேறிய மாநிலமாக திகழ்கிறது. அது நமக்கு பெருமை தருவதாகும். வளர்ச்சித் திட்டங்களையும் சமூக சீர்திருத்தத்தையும் இணைத்ததால் நம் மாநிலம் அடைந்த மாபெரும் பலன் அது. அதே நேரத்தில் முழுமையாக முன்னேற்றம் அடைந்துவிட்டோமா என்றால் இல்லை. அத்தகைய முழுமையான முன்னேற்றத்தை அடையத் தேவையானவை குறித்து நீங்கள் சிந்திக்க வேண்டும். மனிதவள மேம்பாடு, வாழ்க்கைத் தரம், மனித வாழ்க்கையின் ஆயுள், கல்வி கற்றல், குழந்தைகள் வளர்ப்பு, வறுமை ஒழிப்பு, மக்கள் நலவாழ்வு, மனித உரிமைகள், சமூகநீதி, விளிம்பு நிலை மக்கள், இப்படி அனைத்து தரப்புகளிலும் நாம் மேம்பட்டவர்களாக மாற வேண்டும்.
இத்தகைய குறியீடுகளை தமிழகத்தில் மேம்படுத்துவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு முனைப்போடு இருக்கிறது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து நீங்கள் அரசுக்கு வழங்க வேண்டும். சமச்சீரான வளர்ச்சியை, அனைத்து மாவட்டங்களும் ஒரே மாதிரியான வளர்ச்சியை , நான் அடிக்கடி சொல்லி வருகிறேன். அத்தகைய சமச்சீரான வளர்ச்சி நம்மிடம் இதுவரை இல்லை என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். தொழில் வளர்ச்சியில் மாவட்டத்துக்கு மாவட்டம் வேற்றுமை உள்ளது. அதே போல் கல்வியிலும் மாறுபாடு இருக்கிறது. சில மாவட்டத்தில் வறுமை குறைவாகவும், சில மாவட்டங்களில் அதிகமாக இருப்பதை நாம் கண்கிறோம். இந்த வேறுபாட்டையும் மாறுபாட்டையும் களைய தமிழகம் முழுமைக்குமான சமச்சீரான ஒரு வேலைத் திட்டம் தேவை.
எத்தனையோ நல்ல பல திட்டங்களை வகுக்கிறோம். அத்தகைய திட்டம் அடித்தட்டு மக்களைச் சென்றடைந்து விட்டதா? என்பதை நீங்கள் கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உரிய பலனைக் கொடுத்துள்ளதா என்பதை கள ஆய்வு மூலமாக நீங்கள் கண்காணித்து எங்களுக்குச் சொல்ல வேண்டும். நல்ல திட்டமானது போய்ச் சேரவில்லை என்றால் அதனால் எந்த பயனும் இல்லை. அதனை கண்காணிப்பவர்களாக நீங்கள் இருக்க வேண்டும்.
திட்டங்களை உருவாக்குவதற்கும் , அதனை நடைமுறைப்படுத்துவதற்குமான கால இடைவெளியைக் குறைக்க வேண்டும். சுற்றுலா , சிறுகுறு தொழில்கள் , கைவினைப் பொருள்கள் , கைத்தறி போன்ற துறைகளின் மூலமாகவும் வருமானம் ஈட்டுவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். தொழில் உருவாக்கம் என்பது நிதி உருவாக்கமாகவும், வேலைவாய்ப்புபெருக்கமாகவும் மாற வேண்டும். கிராமப்புற மேம்பாடு குறித்து அக்கறையோடு நீங்கள் சிந்திக்க வேண்டும். இப்படி எத்தனையோ வகைகளை நீங்கள் சிந்தித்து எங்களுக்கு வழிகாட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
Related Tags :