இந்த போட்டியில் சிறந்த காளைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு - களமிறங்கும் காளைகள், வீரர்களுக்கு தங்க காசு பரிசு
பதிவு: ஜனவரி 17, 2022 03:57 IST
அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு
அலங்காநல்லூர்:
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடைபெறுகிறது. வழக்கமாக காணும் பொங்கல் தினத்திலேயே அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடத்தப்படுகிறது.
காளைகளை திறந்து விடப்படும் வாடிவாசல், பார்வையாளர்கள் மாடம், நிகழ்ச்சி நடக்கும் மேடை உள்ளிட்ட அனைத்தும் தயார் நிலையில் இருக்கின்றன. 700 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் இன்றைய போட்டியில் களம் காண்கின்றனர்.
களத்தில் இறக்கும் காளைகள் மற்றும் வீரர்கள் அனைவருக்கும் தலா ஒரு தங்ககாசு பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் தேர்வு செய்யப்படும் சிறந்த காளைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிறந்த மாடு பிடி வீரருக்கு உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ சார்பில் கார் பரிசளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்தாயிரத்திற்கும் குறையாமல் ஒவ்வொரு காளைக்கும் பரிசுகள் வழங்கப்பட இருப்பதாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா கமிட்டிக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் எல்இடி டிவி, பீரோ, கட்டில் உள்ளிட்ட சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.
தமிழகத்தின் இன்னாள், முன்னாள் அமைச்சர்கள், ஜல்லிக்கட்டு அமைப்பு நிர்வாகிகள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் வளர்க்கும் முக்கிய காளைகள் இன்று நடைபெறும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் களம் இறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு பணியில் 1,500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபடுகின்றனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Related Tags :