உள்ளூர் செய்திகள்
வெல்லம் (கோப்புப்படம்)

ரேசன் கடைகளுக்கு வந்த 100 டன் வெல்லம் திருப்பி அனுப்பப்பட்டது

Published On 2022-01-15 11:02 GMT   |   Update On 2022-01-15 11:02 GMT
தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரே‌ஷன் அதிகாரிகள் குடோனுக்கு வந்த சுமார் 100 டன் வெல்லத்தை ‘சப்ளை’ செய்த மொத்த கான்ட்ராக்டர்களிடம் திருப்பி அனுப்பிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
சென்னை:

தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளை முன்னிட்டு 2.16 கோடி ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு 21 பொருட்களுடன் கூடிய பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இதில் வழங்கப்படும் வெல்லம் சில கடைகளில் நன்றாக தரமாக இருந்தது. பெரும்பாலான கடைகளில் வழங்கப்பட்ட வெல்லம் ‘பிசுபிசு’ என ஒழுகிய நிலையில் காணப்பட்டது.

கடைக்காரர்கள் அந்த வெல்லத்தை தனியாக கொடுக்காமல் மற்ற பொருட்களுடன் சேர்த்து பையில் போட்டுக் கொடுத்ததால் மற்ற அனைத்து பாக்கெட்டிலும் வெல்லம் பாகு ஒட்டிக்கொண்டது. இதனால் பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது.

இதுபற்றி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆதாரங்களுடன் புகார் கூறினார். உடனடியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ரே‌ஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களை ஆய்வு செய்து வழங்குமாறு உத்தரவிட்டார்.

அதன்பேரில் ஒவ்வொரு பகுதியிலும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ரே‌ஷன் கடைகளுக்கு சென்று மக்களுக்கு தரமான பொருட்கள் வழங்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்தனர்.

அதுமட்டுமின்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் ரே‌ஷன் கடைகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து பொருட்களின் தரத்தை பார்வையிட்டார்.

இந்த நிலையில் வெல்லம் ‘பிசுபிசு’ என இருந்தால் அதை ரே‌ஷன் கடைக்காரர்கள் பொது மக்களுக்கு வழங்காமல் குடோனுக்கு திருப்பி அனுப்பிவிட வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். அதற்கு பதில் குடோனில் நல்ல வெல்லத்தை பெற்று மக்களுக்கு வழங்கவும் அறிவுறுத்தி இருந்தனர். அதன்படி தரமான வெல்லம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரே‌ஷன் அதிகாரிகள் குடோனுக்கு வந்த சுமார் 100 டன் வெல்லத்தை ‘சப்ளை’ செய்த மொத்த கான்ட்ராக்டர்களிடம் திருப்பி அனுப்பிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

100 டன் வெல்லம் தரமாக இல்லாததால் திருப்பி அனுப்புவதாகவும் அதற்கு பதில் தரமான வெல்லத்தை சப்ளை செய்ய வேண்டும் என்றும் கூறி உள்ளனர். அதன் பேரில் தற்போது ரே‌ஷன் கடைகளில் தரமான வெல்லம் வழங்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர்.

சில மாவட்டங்களில் உள்ள கலெக்டர்களிடம் இருந்து வந்த அறிக்கையின் அடிப்படையில் தரமற்ற சில பொருட்களை வினியோகஸ்தர்களிடமே திருப்பி அனுப்பி தரமான பொருட்களை கேட்டு வாங்கி ரே‌ஷன் கடைகளுக்கு வழங்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News