உள்ளூர் செய்திகள்
மாடுகளை அலங்கரிக்க காகித மாலை தயாரிப்பு பணி

மாட்டுப் பொங்கல்-காகித மாலை விற்பனை மும்முரம்

Published On 2022-01-15 09:48 GMT   |   Update On 2022-01-15 09:48 GMT
தஞ்சை மாவட்டத்தில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு காகித மாலை விற்பனை அதிகம் நடந்தது.
தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் திருவையாறு மற்றும் அதனை சுற்றியுள்ள 
இடங்களில் மாட்டுப் பொங்கலுக்காக கடந்த சில வாரங்களாகவே 
காகித மாலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வந்தது.

இன்று மாட்டுப் பொங்கல் என்பதால் மாடுகள்  வளர்ப்போர் அவற்றை குளிப்பாட்டி சந்தனம் குங்குமமிட்டு கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி வருகின்றனர். பிற்பகலில் காகித மாலை, நெட்டி மாலை உள்ளிட்ட 
பல்வேறு வகையான மாலைகள் அணிவித்து வழிபாடு நடத்துவர்.
இதனை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் 
இருந்து காகித மாலை வாங்குவதற்காக கடந்த இரண்டு நாட்களாக 
பலர் திருவையாறுக்கு வந்து வாங்கி செல்கின்றனர். 

இன்று மாலைகள் விற்பனை அதிகளவில் நடந்தது. ஒரு ஜோடி மாலை 
ஆனது இரண்டு அடியை கொண்டு உள்ளது. ரூ. 60 முதல் 80  வரையில் விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து காகித மாலை தயாரிப்பவர்கள் கூறும்போது, தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுக்கு முன்பு மாட்டுப் 
பொங்கலுக்கு மாதக்கணக்கில் சுமார் 2000 மாலைகள் வரையில் 
பூக்கடை வியாபாரிகள் மட்டுமல்லாது மற்ற கடைகாரர்களும் 
தயார் செய்து வந்தனர். 

திருவையாறு சுற்றுவட்டார பகுதியில் கடந்த ஐந்து வருட காலமாக கால்நடைகள் குறைவின் காரணமாக மாலை தயாரிப்பது வெகுவாக குறைந்து விட்டது. இதனை தயாரித்த பலர் வேறு தொழிலுக்கு மாறி 
விட்டனர். தற்போது குறைந்த அளவிலானவர்கள்  மட்டுமே காகித 
மாலை தயார் செய்து வருகின்றனர்.

விவசாயிகள் எந்திரங்களுக்கு மாறிய காரணத்தால் கால்நடைகள் 
பராமரிப்பு குறைந்துவிட்டது முதலில் நகரங்களில் குறைந்து வந்தது. தற்பொழுது கால்நடை உபயோகம் கிராமத்திலும் குறைந்து வருகிறது. அதனாலேயே மாலைகளின் எண்ணிக்கை குறைந்து விட்டன.   
இருப்பினும் தயார் செய்யப்பட்டுள்ள மாலைகள் விற்பனை 
நல்ல படியாக நடந்து வருகிறது என்றனர்.
Tags:    

Similar News