உள்ளூர் செய்திகள்
சென்னை ஐகோர்ட்

10 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு- தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு அறிவுரை

Published On 2022-01-12 07:24 GMT   |   Update On 2022-01-12 07:24 GMT
கொரோனா 3-வது அலை அதிகரித்து வரும் நிலையில் 10, 11, 12-ம் வகுப்புகளின் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகளுக்கு தடை விதித்து, ஆன்லைன் வழியாக மட்டுமே வகுப்புகளை நடத்த உத்தரவிடக்கோரி நெல்லையைச் சேர்ந்த அப்துல் வகாபுதீன் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

“கொரோனாவின் முதல் மற்றும் 2-ம் அலைகளின் போது பள்ளிகள் முழுவதுமாக மூடப்பட்டு, ஆன்லைன் வழியாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது கொரோனாவின் 3-வது அலை மிக தீவிரமாக பரவி வரும் சூழலில், 1 முதல் 9-ம் வகுப்பு வரை மட்டுமே மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடைபெறுகிறது. 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறுகிறது.

இதனால் மாணவர்கள் எளிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

இவற்றை கருத்தில் கொண்டு சி.பி.எஸ்.சி., மெட்ரிகுலே‌ஷன், மற்றும் மாநில பாடத்திட்டத்தின் கீழான பள்ளிகள் என அனைத்து பள்ளிகளிலும் நேரடி வகுப்புகள் நடத்த தடை விதித்து, ஆன்லைன் வழியாக மட்டுமே வகுப்புகளை நடத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறிஇருந்தார்.

இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அட்வகேட் ஜெனரல் ஆர். சண்முகசுந்தரம் ஆஜராகி “மழலையர் வகுப்புகள் மற்றும் 1 முதல் 9 வரை நேரடி வகுப்புகளுக்கு அனுமதி கிடையாது. 10 முதல் 12 வரையிலான வகுப்புகளின் மாணவர்கள் முதல் தவணை தடுப்பூசி எடுத்துக்கொள்ளவே பள்ளிக்கு அழைக்கப்படுகின்றனர்.

நேரடி வகுப்புகள் நடத்துவதும், கலந்து கொள்வதும் கட்டாயமில்லை எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது குறித்து அந்தந்த பள்ளிகள் முடிவு எடுக்கலாம் என்றும் தமிழக அரசு கொள்கை முடிவெடுத்துள்ளது.

மேலும் நேரடி வகுப்புகள் நடத்தினால் கலந்து கொள்வது மாணவர்களின் விருப்பத்திற்குட்பட்டது” என்று கூறினார்.

அதற்கு, நீதிபதிகள் 3-வது அலை அதிகரித்து வரும் நிலையில் 10, 11, 12-ம் வகுப்புகளின் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்துவதை தவிர்க்க வேண்டும்.

ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்த வேண்டும். இதன்மூலம் ஆசிரியர்கள், மாணவர்கள், பணியாளர்கள் என அனைவரின் பாதுகாப்பும் உறுதிசெய்யப்படும்“ என்று தமிழக அரசுக்கு அறிவுரை வழங்கினர்.

பின்னர் மனுதாரர் தரப்பிடம், “அரசின் கொள்கை முடிவை மீறி பள்ளிகளை மூடும்படி நாங்கள் உத்தரவிட முடியாது. எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்? எத்தனை பேர் மரணம் அடைந்துள்ளார்கள்? என்ற விவரங்கள் ஏன் மனுவில் இடம் பெறவில்லை?” என கேள்வி எழுப்பினர்.

பின்னர், மனுதாரர் தரப்புக்கு அபராதம் விதிக்கப் போவதாக நீதிபதிகள் எச்சரிக்கை செய்தனர்.

இதையடுத்து வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாரர் அப்துல் வகாபுதீன் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


Tags:    

Similar News