உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்த வாலிபர் கைது

Published On 2022-01-11 09:59 GMT   |   Update On 2022-01-11 09:59 GMT
கரூர் அருகே பெண்ணுடன் ஏற்பட்ட தகராறில் 3 மோட்டார் சைக்கிள்களுக்கு தீவைத்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:

கரூர் அருகே பசுபதிபாளையம் பகுதிக்கு உட்பட்ட விவேகானந்தா தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர்.

இவர்கள் தாங்கள் பயன்படுத்தும் இருசக்கர வாகனங்களை, இரவு நேரத்தில் வீட்டின் முகப்பில் நிறுத்துவதை வழக்கம்.

இந்நிலையில் சம்பவத்தன்று குடியிருப்பு முன்பாக நிறுத்தி வைத்திருந்த 3 மோட்டார் சைக்கிள்கள் நள்ளிரவில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது.

இதனை பார்த்த அப்பகுதியினர் தீயை அணைக்க முயற்சித்தனர். இதற்கிடையில் கரூர் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர்.

விரைந்த வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைத்தனர். அதற்குள் போக்குவரத்து துறையில் நடத்துனராக பணிபுரியும் ரஞ்சன் மற்றும் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் பிரியா ஆகியோரது மோட்டார் சைக்கிள் முற்றிலுமாக எரிந்து சாம்பலானது. மேலும் டாஸ்மாக்கில் பணிபுரியும் சக்திவேல் என்பவருடைய மோட்டார் சைக்கிள் பாதி எரிந்த நிலையில் அதனை மீட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக வந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர்.

விசாரணையில் கரூர் மாவட்டம் லிங்கத்தூரை சேர்ந்த பிரகாஷ் என்பவர் மோட்டார் சைக்கிள்களை தீ வைத்து எரித்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதில் பிரகாசுக்கும் குடியிருப்பில் வசித்து வரும் பிரியாவுக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ், மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்துள்ளது.
Tags:    

Similar News