உள்ளூர் செய்திகள்
கொலை செய்யப்பட்ட நாகபத்திரம், கைதான தங்கராஜ்

சாயர்புரத்தில் தொழிலாளி கொலையில் வாலிபர் கைது

Published On 2022-01-10 10:31 GMT   |   Update On 2022-01-10 10:31 GMT
சாயர்புரத்தில் செல்போன் தர மறுத்ததால் மாடு மேய்க்கும் தொழிலாளியை அரிவாளால் வெட்டிக்கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தை அடுத்த பெருங்குளம் உடையடியூரை சேர்ந்தவர் நாகபத்திரம்(வயது 66). மாடு மேய்க்கும் தொழிலாளி.

இவருக்கு நாகம்மாள்(60) என்ற மனைவியும், 3 மகன்கள் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். நாகபத்திரம் தனது வீட்டில் 6 மாடுகளை வளர்த்து வந்தார். 

நேற்று வழக்கம்போல் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற நாகபத்திரம் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது மூத்த மகன் முத்துக்குமார் காட்டுப்பகுதிக்கு தேடி சென்றார்.

நட்டாத்தியில் இருந்து மீனாட்சிபட்டி செல்லும் சாலையில் உள்ள ஓடை பாலம் அருகே நாகபத்திரம் மர்ம நபரால் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். உடனே முத்துக்குமார் சாயர்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

 சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார். அவரது உத்தரவின்பேரில், ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் மேற்பார்வையில் சாயர்புரம் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா மற்றும் ஸ்ரீவைகுண்டம் சப்&இன்ஸ்பெக்டர் அன்னராஜ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர், நாகபத்திரத்தை கொலை செய்த மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது நட்டாத்தி ஓடை பாலம் அருகே உள்ள காட்டு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றி திரிந்தவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், அந்த நபர் சாயர்புரம் அருகே உள்ள கொம்புகாரன் பொட்டலை சேர்ந்த தங்கராஜ் என்ற தங்கம்(20) என்பதும், அவர் நாகபத்திரத்தை கொலை செய்ததும் தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் கிடைத்த தகவல் வருமாறு:-

காட்டுப்பகுதியில் மாடு மேய்த்துக்கொண்டு இருந்த நாகபத்திரத்தை கண்ட தங்கராஜ், அவரது அருகில் சென்று ஒரு போன் செய்ய வேண்டும் என்று கூறி அவருடைய செல்போனை கேட்டுள்ளார். நாகபத்திரம் தர மறுக்கவே 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்ப்பட்டு தகராறு ஆகி உள்ளது. 
 
இதில் ஆத்திரமடைந்த தங்கராஜ், நாகபத்திரத்தை அவர் வைத்திருந்த அரிவாளால் வெட்டிக்கொலை செய்து விட்டு, அவருடைய செல்போனையும் பறித்து சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. 

இதையடுத்து தனிப்படை போலீசார், அவரிடம் இருந்து கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட அரிவாளையும், செல்போனையும் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News