உள்ளூர் செய்திகள்
நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழாவையொட்டி கொடிமரத்திற்கு தீபாராதனை காட்டப்பட்டபோது எடுத்த படம்.

நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2022-01-09 05:15 GMT   |   Update On 2022-01-09 05:15 GMT
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் இன்று தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.
நெல்லை:

நெல்லை டவுனில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பூச திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.

இந்த ஆண்டு கொரோனா வழிகாட்டுதல்களை கடைபிடித்து இன்று தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கொடி மரத்திற்கு தீபாராதனை காட்டப்பட்டது. 

இந்த நிகழ்ச்சிகளில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. மொத்தம் 11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் 4-ம் நாளில் திருநெல்வேலி என பெயர் வர காரணமாக அமைந்த நெல்லுக்கு வேலியிட்ட திருவிழா நடைபெற உள்ளது.

தொடர்ந்து 5-ம் திருநாள் அன்று கோவில் தைப்பூச மண்டபத்தில் தைப்பூச தீர்த்தவாரியும், மறுநாள் தெப்ப திருவிழாவும் நடக்கிறது. வழக்கமாக டவுன் ஆர்ச் அருகே உள்ள வெளித்தெப்பத்தில் தெப்ப திருவிழா நடக்கும். 

ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக உள்தெப்பத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. திருவிழாவின் அனைத்து நாட்களிலும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

கோவிலின் உட் பிரகாரத்திலேயே அனைத்து நிகழ்ச்சிகளும் நடக்கும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News