உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

செய்துங்கநல்லூரில் ரெயில் நின்று செல்லக்கோரி 25-ந்தேதி ரெயில் மறியல் போராட்டம்

Published On 2022-01-08 11:21 GMT   |   Update On 2022-01-08 11:21 GMT
திருச்செந்தூர்-பாலக்காடு ரெயில் செய்துங்கநல்லூர் வழியாக நெல்லைக்கு இயக்கப்படுகிறது. ஆனால் செய்துங்கநல்லூரில் இந்த ரெயில் நிறுத்தப்படவில்லை. இதனால் அதனை நின்று செல்ல வலியுறுத்தி வருகிற 25-ந்தேதி ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
செய்துங்கநல்லூர்:

 திருச்செந்தூர்-பாலக்காடு பயணிகள் ரெயில் கொரோனா காலத்துக்கு முன்பு ஓடியது. அப்போது செய்துங்கநல்லூர், தாதன்குளம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய இடங்களில் இந்த ரெயில் நின்று சென்றது.

தற்போது இந்த ரெயில் விரைவு ரெயிலாக இயக்கப்படுகிறது. ஆனால் தற்போது செய்துங்கநல்லூர், தாதன்குளம், ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்படவில்லை.  

அதே போல் தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட கடையம், பாவூர்சத்திரம், செங்கோட்டை ரெயில் நிலையங்களிலும் திருச்செந்தூர்-பாலக்காடு   ரெயில்  நின்று செல்ல வேண்டும் என அப்பகுதியினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது குறித்து பல்வேறு கடிதங்களை பல்வேறு அமைப்புகள் மூலமாக ரெயில்வே நிர்வாகத்துக்கு அனுப்பி வருகின்றனர். தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜ் ஆகியோரும், ரெயில்வே துறை  அதிகாரிகளுக்கு முறைப்படி மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் உள்ள இந்த 3 ரெயில் நிலையங்களையும்  ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டே புறக்கணிப்பதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இது செய்துங்கநல்லூர் பகுதி பொதுமக்கள்  கூறியதாவது:
பயணிகள் ரெயிலாக இயங்கி வந்த திருச்செந்தூர்- நெல்லை ரெயிலும் விரைவு ரெயிலாக இயக்கப்பட்டும் செய்துங்கநல்லூர், தாதன் குளம்,  ஸ்ரீவைகுண்டத்தில் நின்று செல்கிறது.

மேலும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்கிறது.  இந்த இரு ரெயில் நிலையமும் இருரெயில்கள் நின்று செல்லும் வகையில் தண்டவாளங்கள் அமைக்கப் பட்டுள்ளது.

 மிகப்பெரிய ரெயில் நிலையங்களாக இந்த நிலையங்கள் இருந்தும் கூட திட்டமிட்டே இந்த ரெயில் நிலையங்களை புறக்கணித்து வருகின்றனர்.

அதே நேரத்தில் பாலக்காடு& திருச்செந்தூர் ரெயில் போக்குவரத்தினை பொறுத்தவரை தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது.

கடந்த டிசம்பர்  16-ந் தேதி இயக்கப்பட்ட இந்த ரெயில் கடந்த 24.12.2021 முதல் கேரள நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், வட்டார பொதுமக்கள் தொடர் முயற்சியால் கேரளாவில் உள்ள ஆனை மலை ரோடு நிலையத்தில் ரெயில் நின்று செல்ல ரெயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

ரெயில்வேயில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் கேரளாவை சேர்ந்தவர்கள். எனவே அவர்கள் ஊரில் மட்டும் ரெயிலை நின்று செல்ல நட வடிக்கை எடுத்து உள்ளார்கள்.

ஆனால் தமிழ்நாட்டில் தொடர் கோரிக்கை வைத்தும் முன்பு இதே  ரெயில்  செய்துங்கநல்லூர், தாதன்குளம், ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் நிற்க விடாமல் தடுத்து விட்டனர். இதனால் இந்த பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளனர்.

எனவே செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து நிர்வாகம், முகைதீன் ஆண்டவர் ஜாமியா பள்ளி வாசல் நிர்வாகிகள், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள், செய்துங்கநல்லூர் தொழில் வர்த்தக சங்கத்தின் சார்பில் பொது மக்களை திரட்டி பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன் தலைமையில் வருகிற 25 &ந் தேதி செய்துங்கநல்லூர் வரும் பாலக்காடு&- திருச்செந்தூர் ரெயிலை மறியல் செய்துவது என முடிவு செய்துள்ளோம்.

 தொடர்ந்து ரெயில்வே நிர்வாகத்தினால் பாதிக்கப்பட்ட தாதன்குளம், ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள பொது மக்கள் மற்றும் அமைப்பின் நிர்வாகிகள் அந்தந்த ரெயில் நிலையத்தில் இதே நேரத்தில் மறியல் செய்ய ஏற்பாடு செய்து வருகிறார்கள். இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் இப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News