உள்ளூர் செய்திகள்
வானதி சீனிவாசன்

அரசு பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்திருக்கிறார்கள்? - வெள்ளை அறிக்கை கேட்கும் பாஜக

Published On 2022-01-08 07:35 GMT   |   Update On 2022-01-08 07:35 GMT
நீட் தேர்வினால் சமூக நீதிக்கு எள் முனையளவு கூட பாதிப்பு இல்லை என அனைத்துக்கட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை:

நீட் தேர்வு தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் பா.ஜனதா சார்பில் வானதி சீனிவாசன் பங்கேற்றார். நீட் விலக்கு தொடர்பான தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வானதி சீனிவாசன் அனைத்து கட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இன்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க பா.ஜனதாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பா.ஜனதா சார்பில் நான் பங்கேற்று எங்களது நிலைபாட்டினை தெரிவித்தேன்.

இந்த தீர்மானத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்று சொல்லிவிட்டு அந்த கூட்டத்தில் இருந்து வெளியே வந்திருக்கிறேன்.

இந்த கூட்டத்தில் கொடுக்கப்பட்ட தீர்மானத்தில் மாநில அரசு நிதியில் இருந்து மாநில அரசுகளால் தொடங்கி நடத்தப்பட்டு வரும் மருத்துவ கல்லூரிகள், அம்மாநில மாணவர்கள் எந்த முறையில் சேர்க்கப்பட வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யும் உரிமையை மாநில அரசிடம் இருந்து மத்திய அரசு பறித்துவிட்டது. இது மாநில சுயாட்சிக்கு எதிரானது என்று தீர்மானத்திலே குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

அரசு மருத்துவ கல்லூரியை உருவாக்க வடகிழக்கு மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் 60 சதவீத நிதி உதவியை மத்திய அரசு செய்கிறது. 40 சதவீத நிதி உதவியைத்தான் மாநில அரசு செய்கிறது. இதை நான் குறிப்பிட்டேன்.

மத்திய அரசினால் மாநில அரசுகளின் மீது திணிக்கப்பட்டுள்ள நீட் தேர்வானது என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த நீட் தேர்வு வந்த வரலாறு என்பது ஆண்டுக்கணக்காக விவாதிக்கப்பட்டு வந்த வி‌ஷயம்.

இது பா.ஜனதா செயல் திட்டத்தில் இருந்து அவர்கள் ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு புதியதாக உருவாக்கப்படவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்த போதே 2013-ல் இருந்து எடுக்கப்பட்ட இதன் முன் முயற்சிகள் அத்தனையும் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி அரசாங்கத்தினால்தான் செய்யப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் நாடு முழுவதும் நீட் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. சமூக நீதிக்கு நீட் தேர்வு எதிராக இருப்பதாக குறிப்பிடுகிறார்கள்.

தமிழகத்தில் சமூக நீதி இடஒதுக்கீட்டின் அடிப்படையில் அமையப்பட்டது. 69 சதவீதம் இட ஒதுக்கீடு தமிழகத்தில் இருந்து கொண்டிருக்கிறது. அதற்கு எந்த பாதிப்பும் இல்லை.



2020-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகளில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுடைய இட ஒதுக்கீட்டு இடங்களைவிட அதிகமான இடங்களை அந்த மாணவர்கள் பெற்று இருக்கிறார்கள்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் என்ன இடஒதுக்கீடு பெறுகிறார்களோ அதைவிட அதிக எண்ணிக்கையில் பெற்றிருக்கிறார்கள். பட்டியல் இனத்தை சேர்ந்த மாணவர்கள் என்ன இடங்களை பெற வேண்டுமோ அதைவிட அதிகமான இடங்களை பெற்றிருக்கிறார்கள்.

எனவே நீட் தேர்வினால் இட ஒதுக்கீடு பாதிக்கப்படுகிறது என்பது 100 சதவீதம் உண்மைக்கு புறம்பானது. நீட் தேர்வினால் சமூக நீதிக்கு எள் முனையளவு கூட பாதிப்பு இல்லை.

கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களுக்கு எதிராக நீட் இருப்பதாக தொடர்ந்து ஒரு குற்றச்சாட்டினை முன் வைக்கிறார்கள். 2007 முதல் 2017 வரை ஒவ்வொரு வருடமும் அரசு பள்ளி மாணவர்கள் 30 முதல் 40 பேருக்குத்தான் அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்திருக்கிறது.

ஒரு சதவீதத்திற்கும் குறைவான மாணவர்களே சேர்ந்திருக்கிறார்கள். ஆனால் இதற்கு முன் தமிழகத்தை ஆட்சி செய்த அ.தி.மு.க. அரசின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடுத்த மிக முக்கிய முயற்சியின் காரணமாக 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை அவர் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கியதால் 220-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.

எனவே கிராமப்புற அரசு பள்ளி ஏழை மாணவர்களின் நலனை 7.5 சதவீத இட ஒதுக்கீடு பாதுகாத்து கொண்டு இருக்கிறது. 12 சதவீத மருத்துவ இடங்களை தமிழகம் பெறப்போகிறது. இதில் 7.5 சதவீதம் அரசு பள்ளி மாணவர்கள் சேர்ந்தால் எண்ணிக்கை கணிசமாக உயரும். இது இங்கு தொடர்ச்சியாக நடைபெற வேண்டும்.

மாணவர்கள் தங்கள் தாய் மொழியிலேயே நீட் தேர்வை எழுதுகின்ற காரணத்தால் அந்தந்த மாநில மொழிகளில் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.

12 வருடங்களாக தமிழகத்தில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படாமல் உள்ளது. கடந்த 2 வருடங்களாக நல்ல முறையில் நீட் தேர்வு எழுதி தேசிய சராசரியைவிட அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழக மாணவர்கள் மீது நம்பிக்கை வையுங்கள். அவர்களை குழப்பாதீர்கள். எனவே நீட் தேர்வை எதிர்க்க வேண்டிய அவசியமில்லை என்று வலியுறுத்தி இருக்கிறோம்.

எங்கள் கட்சி தலைவர் அண்ணாமலையும் மற்ற தலைவர்களும் தமிழகத்தில் எந்தெந்த அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் மருத்துவ கல்லூரிகளை நடத்தி கொண்டிருக்கிறார்கள். நீட் தேர்வு வருவதற்கு முன்பாக தனியார் மருத்துவ கல்லூரிகளில் அவர்கள் பெற்ற கட்டணம், நன்கொடை எவ்வளவு? நீட் தேர்வு வருவதற்கு முன்பாக அரசு பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்திருக்கிறார்கள் என்பதை பற்றிய ஒரு வெள்ளை அறிக்கை வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த வெள்ளை அறிக்கையை முதல்-அமைச்சர் தரவேண்டும் என்பது எங்கள் கோரிக்கை.

தமிழகத்தை பொறுத்தவரை தனியார் மருத்துவ கல்லூரிகள் எந்த வரையறையும் இல்லாமல் கட்டண கொள்ளை நடத்திக் கொண்டு இருந்தது. இந்த நீட் தேர்வு வாயிலாக தடுத்து நிறுத்தப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.


Tags:    

Similar News