உள்ளூர் செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

ரே‌ஷனில் வழங்கப்படும் பொங்கல் பொருட்கள் தரமானதாக இல்லை- எடப்பாடி பழனிசாமி

Published On 2022-01-07 07:50 GMT   |   Update On 2022-01-07 07:50 GMT
எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாட்டையும், ஆளும் கட்சியாக வந்த பிறகு வேறு ஒரு நிலைப்பாட்டையும் எடுப்பதுதான் தி.மு.க. ஆட்சி என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை:

சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த எடப்பாடி பழனிசாமி கலைவாணர் அரங்க வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

1983-ம் ஆண்டைய தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டத்தை மேலும் திருத்தி சட்ட முன்வடிவை சட்டசபையில் தாக்கல் செய்துள்ளனர். இதில் 5 ஆண்டு வரை ஆயுள் உள்ள கூட்டுறவு சங்கங்களை 3 ஆண்டாக குறைப்பதாக கூறப்பட்டுள்ளது.

கூட்டுறவு சங்க தேர்தல் இதற்காக அமைக்கப்பட்ட ஆணையம் மூலம் தான் நடத்தப்பட்டு இருந்தது. இந்த சூழலில் சட்ட விரோதமாக இதன் பதவிக்காலத்தை 5 ஆண்டில் இருந்து 3 ஆண்டாக இந்த அரசு குறைத்துள்ளது. இது ஜனநாயக படுகொலை.

கூட்டுறவு சங்கங்களில் முறைகேடுகள் நடந்திருந்தால் தான் அந்த சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். கூட்டுறவு சங்கங்கத்தில் உள்ள ஒரு குழுவே முறைகேடு செய்தால் அந்த சங்கத்தை மட்டும் கலைக்க முடியும்.

ஆனால் ஒட்டுமொத்த கூட்டுறவு சங்கங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை குறைக்கும் வகையில் சட்டம் கொண்டுவந்துள்ளனர். இது தி.மு.க. அரசு திட்டமிட்டு செய்யும் ஜனநாயக படுகொலை ஆகும்.



நேற்றைய தினம் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது ஸ்மார்ட் சிட்டி பற்றி பல கருத்துக்களை கூறி உள்ளார். அதில் முறைகேடு நடந்ததாகவும், விசாரணை கமி‌ஷன் அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை ஐ.ஏ.எஸ். குழுவினர் தான் தேர்வு செய்து அதற்கான கமிட்டியில் முடிவு செய்யப்பட்டு பணிகள் நடந்துள்ளன. எனவே முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை.

அம்மா மினிகிளீனிக் திட்டம், சிறப்பான திட்டம். அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் அம்மா மினி கிளீனிக்கை தி.மு.க. அரசு மூடியுள்ளது. அம்மா உணவகமும், சிறப்பாக தான் செயல்படுகிறது.

இந்த திட்டத்தை வெளிமாநிலங்களில் செயல்படுத்த பார்த்து செல்கிறார்கள். கொரோனா கால கட்டத்தில் தினமும் 7 லட்சம் பேருக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டது. இந்த ஆட்சியிலும் அம்மா உணவகம் மூலம் தான் கொரோனா காலத்தில் உணவு வழங்கப்பட்டது.

ஆனால் அம்மா உணவகத்தை மூடினால் என்ன என்று துரைமுருகன் கேட்கிறார். இது வேதனை அளிப்பதாக உள்ளது. திட்டமிட்டு ஜெயலலிதா பெயரில் உள்ள திட்டங்களை முடக்கப்பார்க்கிறார்கள். அ.தி.மு.க. கொண்டுவந்துள்ள திட்டங்களையும் முடக்கப்பார்க்கிறார்கள்.

ரே‌ஷனில் 21 வகை பொருட்களை பொங்கல் பரிசாக அரசு கொடுத்து வருவதாக கூறுகிறது. ஆனால் எல்லோருக்கும் 21 பொருட்கள் கிடைப்பதில்லை. 16 பொருட்கள் தான் கிடைக்கிறது. சில இடங்களில் இதை விடவும் குறைவாகத்தான் கொடுக்கிறார்கள். அப்படி வழங்கும் பொங்கல் பொருட்களும் தரமானதாக இல்லை.

அவர்கள் தரும் வெல்லம் இளகி ஒழுகுகிறது. அரிசியில் பூச்சி, கோதுமையில் வண்டு இருக்கிறது. இது நான் சொல்லவில்லை, பொது மக்கள் சொல்லும் கருத்து என்று கூறிவிட்டு லேப் டாப்பில் வீடியோ பதிவுகளை நிருபர்களிடம் காட்டினார்.

அதில் ரே‌ஷன் கடையில் பொருட்கள் வாங்கிச் செல்லும் பெண்கள் புகார் கூறும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. மக்களுக்கு இதை தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காத்தான் இதை சொல்கிறேன்.

நாங்கள் ஆட்சியில் இருந்த போது 2020-ல் ரூ.1000 பொங்கல் பரிசு கொடுத்தோம். 2021-ல் ரூ.2,500 கொடுத்தோம். அதுவும் சரியான முறையில் மக்களை சென்றடைந்தது. இப்போது இந்த ஆட்சியில் மக்களுக்கு பொங்கல் பணம் கொடுக்கவில்லை.

அ.தி.மு.க. ஆட்சி நடந்த போது கொரோனா காலத்தில் டாஸ்மாக் கடையை திறந்து வைப்பதா? என்று மு.க.ஸ்டாலின் அவர் வீட்டு முன்பு பதாகைகள் ஏந்தி போராட்டம் நடத்தினார். இப்போது கொரோனா வேகமாக பரவுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகிறார். அப்படி இருந்தும் டாஸ்மாக் கடைகள் மூடப்படாமல் உள்ளன.

எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாட்டையும், ஆளும் கட்சியாக வந்த பிறகு வேறு ஒரு நிலைப்பாட்டையும் எடுப்பதுதான் தி.மு.க. ஆட்சி.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News