உள்ளூர் செய்திகள்
வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 12-ந்தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

Published On 2022-01-06 06:55 GMT   |   Update On 2022-01-06 06:55 GMT
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்துவருகிறது. கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகை காலத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் விலக்கிக்கொள்ளப்பட்டது.

இந்த வருடமும் அதே போல பருவமழை ஜனவரி 2-வது வாரம் வரை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

பொதுவாக இந்த மாதத்தில் வறண்ட வானிலையே காணப்படும். படிப்படியாக மழை குறைந்து இந்த மாத மத்தியில் பருவமழை முடிவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

தமிழகம் முழுவதும் லேசான மழை பரவலாக பெய்து வருகிறது. கடலோர பகுதிகளில் மழை நீடிக்கிறது. 8-ந்தேதி முதல் கடலோர பகுதிகளில் மழை அதிகரிக்கக்கூடும்.



ஒரு குறைந்த காற்றழுத்தத்தின் காரணமாக தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் வடகடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஜனவரி 12-ந்தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக் கூடும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பல மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை முடிந்துவிட்ட நிலையில் தமிழகத்தில் இன்னும் பெய்து வருகிறது. பருவமழை விலக்கிக்கொள்ளப்பட்டதாக சென்னை வானிலை மையம் இதுவரை அறிவிக்கவில்லை.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.


Tags:    

Similar News