திண்டுக்கல்லில் மோசடி புகாரில் சிக்கிய பெண் சாமியார் தன்னை கைது செய்ய முயன்றபோது போலீசார் முன்பு சாமியாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகில் உள்ள வீலிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த தவயோகி ஞானதேவபாரதி. இவர் அப்பகுதியில் ஆசிரமம் நடத்தி வருகிறார். கடந்த ஓராண்டுக்கு முன்பு இந்த ஆசிரமத்தில் திருட்டு நடைபெற்றது. அந்த பிரச்சினையை தீர்த்து வைப்பதாகக் கூறி திண்டுக்கல் ஆரோக்கிய மாதா தெருவைச் சேர்ந்த பவித்ரா (வயது 45) என்ற பெண் சாமியார் வந்துள்ளார். பின்னர் அங்கேயே சில நாட்கள் தங்கி ஆன்மீக சொற்பொழிவு ஆற்றியுள்ளார்.
மேலும் சித்தரேவு பகுதியில் தனக்கு சொந்தமான நிலம் இருப்பதாகவும், அந்த இடத்தில் முதியோர் இல்லம் தொடங்கலாம் என்று பவித்ரா கூறியுள்ளார். இதற்காக ரூ.11 லட்சம் பணத்தை பவித்ரா பெற்றுள்ளார்.
மேலும் கும்பகோணத்திலும் ஆசிரமம் தொடங்க அவர் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஞானதேவபாரதி இல்லாத நேரத்தில் ஆசிரமத்திற்கு சென்ற பவித்ரா அங்கிருந்த சுந்தரேசன் என்பவர் உதவியுடன் 35 பவுன் நகைகள் மற்றும் சொத்து ஆவணங்களை எடுத்துச் சென்றதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து ஞானதேவபாரதி பவித்ராவிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் பவித்ரா அங்கிருந்து வெளியேறி தலைமறைவாகிவிட்டார். இதனை தொடர்ந்து ஆசிரமத்தில் புலி மற்றும் மான் தோல் பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு பவித்ரா புகார் அளித்தார். இதனால் ஞானதேவபாரதி தலைமறைவானார். இதனை பயன்படுத்திக் கொண்டு பவித்ரா தனக்கு தெரிந்த நபரை காவலாளியாக நியமித்து ஆசிரமத்தை பூட்டி அதனை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயன்றார்.
இந்நிலையில் பவித்ரா மீது நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் ஞானதேவபாரதி மற்றும் அருள்மணி ஆகியோர் 2 புகார்கள் அளித்தனர். ஆசிரமம் தொடங்குவதாக பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாகவும், தாங்கள் இல்லாத நேரத்தில் ஆசிரமத்திற்குள் புகுந்து அத்துமீறி நுழைந்து சொத்து ஆவணங்கள் மற்றும் நகையை திருடிச் சென்றதாக புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் பவித்ரா மற்றும் அவரது தங்கை ரூபாவதி ஆகியோரை தீவிரமாக தேடி வந்தனர்.
போலீசார் தங்களை தேடிவருவதை அறிந்ததும் பவித்ரா மற்றும் ரூபாவதி ஆகியோர் தலைமறைவாகினர். பல்வேறு பகுதிகளில் பதுங்கியிருந்த அவர்களை போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில் திண்டுக்கல் ஆரோக்கியமாதா தெருவில் அவர்கள் மீண்டும் வந்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை பிடிக்கச் சென்றபோது அவர்களை நெருங்கவிடாமல் பவித்ரா சத்தம் போட்டுள்ளார். நான் காளியின் அவதாரம்.... என்னைக் கைது செய்தால் பஸ்பம் ஆகிவிடுவீர்கள் என எச்சரித்துள்ளார்.
இருந்தாலும் போலீசார் அவரை சுற்றி வளைத்ததால் அங்கு கட்டிடப்பணிகள் நடந்துவரும் இடத்தில் பதுங்கிக் கொண்டார். தன்னை நெருங்கினால் விபரீத விளைவுகளை சந்திக்க நேரிடும் என கூறியவாறே சாமியாடியபடி அவர்களை எச்சரித்துள்ளார். இதனையடுத்து போலீசார் பெண் காவலர்களை சம்பவ இடத்திற்கு வரவழைத்து பவித்ரா மற்றும் ரூபாவதியை கைது செய்தனர். பின்னர் அவர்கள் இரண்டு பேருக்கும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப் பட்டது. பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நிலக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட பெண் சாமியார் பவித்ரா திருமணம் ஆகாதவர் என்று போலீசார் தெரிவித்தனர். இவருடன் தங்கியிருந்த ரூபாவதி திருமணம் ஆகி கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றவர். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். அவர்களை பவித்ராதான் படிக்க வைத்துள்ளார். ரூபாவதி மற்றும் சில பெண் சீடர்களை உதவிக்கு வைத்திருந்தார். தன்னை பெண் சாமியார் என பிரதிபலிக்க அருள்வாக்கு கூறுவதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால் பல்வேறு பகுதிகளிலிருந்து இவரிடம் ஆசி பெறுவதற்காக முக்கிய பிரமுகர்கள், போலீஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர் ஆகியோர் வந்துள்ளனர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அவர்கள் மூலம் பல்வேறு சலுகைகளை பெற்றுள்ளார். மேலும் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் பெயர்களை பயன்படுத்தி தன்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்று மிரட்டி வந்துள்ளார்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில் அவர் வசிக்கும் வீடு மர்மமான இடமாகவே இருக்கும். சில நாட்கள் பூட்டியிருக்கும். பல நாட்கள் திறந்திருக்கும். வீட்டிற்கு பலர் வந்து செல்வார்கள். ஆனால் யார் என்று அக்கம் பக்கத்தினருக்குக் கூட தெரியாது. அந்த வீட்டில் யார் இருக்கிறார்கள் என்பதுகூட மர்மமாகத்தான் இருக்கும். போலீசார் மேலும் விசாரணை நடத்தினால் இன்னும் பல மர்ம முடிச்சுகள் விலகும் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.