உள்ளூர் செய்திகள்
சந்திப்பு ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்ட காட்சி.

நெல்லையில் இன்று 47 பேருக்கு கொரோனா

Published On 2022-01-05 10:23 GMT   |   Update On 2022-01-05 10:23 GMT
நெல்லை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 

தொடர் பண்டிகை விடுமுறை காரணமாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. கடந்த மாதம் 27-ந்தேதி தொற்று பாதிப்பு இல்லாத மாவட்டமாக நெல்லை இருந்த நிலையில் படிப்படியாக பாதிப்பு எண்ணிக்கை உயர தொடங்கியுள்ளது.

நேற்று முன்தினம் 17 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று பாதிப்பு 22 ஆக ஆனது. இன்று வெளியான பரிசோதனை முடிவில் 47 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நேற்று போலவே இன்றும் மாநகர பகுதியில் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு பெண் டாக்டரும் அடங்குவார். 

இதுதவிர அம்பையில் 8 பேருக்கும், நாங்குநேரியில் 6 பேருக்கும், பாப்பாக்குடி, ராதாபுரத்தில் தலா 4 பேருக்கும், களக்காட்டில் மூன்று பேருக்கும், சேரன்மகாதேவி, வள்ளியூர், மானூரில் தலா 2 பேருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தொடர்ந்து பாதிப்பு உயர்ந்து வருவதால் மாநகர் மற்றும் மாவட்டங்கள் முழுவதும் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

பொது இடங்களில் சமூக இடைவெளியை கடை பிடிக்காமல், முகக்கவசம் அணி யாமல் சுற்றி திரிபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. போலீசார் மற்றும் சுகாதாரத் துறையினர் இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

மாநகர பகுதியில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடைகளுக்கு சுகாதார துறை அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர். தினமும் சராசரியாக 100-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. 

மண்டலம் வாரியாக சுகாதார ஆய்வாளர்கள் தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். 

மேலும் புதிய பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் விதமாக வெளிமாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ரெயிலில் நெல்லைக்கு வரும் பயணிகளுக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது.

இதற்காக சந்திப்பு ரெயில் நிலையத்தில் மருத்துவ குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் ரெயிலில் வரும் பயணிகளை சளி மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்புகின்றனர்.

இதுதவிர மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News