உள்ளூர் செய்திகள்
திருப்பூரில் உள்ள கடையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

திருப்பூர் கடைகளில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு - முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

Published On 2022-01-05 08:27 GMT   |   Update On 2022-01-05 08:27 GMT
கொரோனா தொற்று பரவல் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக கண்காணிக்கப்படும்.
திருப்பூர்:

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவல் சற்று அதிகரித்துள்ளது. இதையடுத்து மாவட்டம் தோறும் கொரோனா சிகிச்சை மையங்கள், சிகிச்சை வார்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.  

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஏறி இறங்கி வருகிறது. நேற்று 54 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கடந்த வாரங்களை காட்டிலும் தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் நோய் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட மாவட்ட நிர்வாகம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதார பிரிவினர் மீண்டும் கையில் எடுத்துள்ளனர்.

முதல் கட்டமாக கடை களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் முக கவசம் அணியாமல் உள்ளது குறித்து நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப் பட்டு வருகிறது.   

இதுகுறித்து சுகாதார பிரிவினர் கூறுகையில்:

கொரோனா தொற்று பரவல் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக கண்காணிக்கப்படும். இந்த நடவடிக்கையில் பொது மக்கள், தொழில் துறையினர், வர்த்தகர்கள் உரிய ஒத்துழைப்பு தர வேண்டும். நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றனர்

இந்தநிலையில் மாவட்ட எஸ்.பி-.,சசாங் சாய் முககவசம் அணியாமல் வெளியில் சுற்றி திரிபவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

நேற்று ஒரே நாளில் முககவசம் அணியாத 92 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.18,400 வசூலிக்கப்பட்டது. தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News