உள்ளூர் செய்திகள்
சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுகவினர்

சட்டசபை கூட்டத்தொடர்- அ.தி.மு.க., வி.சி.க. வெளிநடப்பு

Published On 2022-01-05 05:04 GMT   |   Update On 2022-01-05 06:17 GMT
நீட் தேர்வு மசோதாவுக்கு மத்திய அரசு விலக்கு அளிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளிநடப்பு செய்துள்ளது.
சென்னை:

தமிழக சட்டசபை இன்று காலை 10 மணிக்கு கூடியது. கூட்டத்தில் உரை நிகழ்த்துவதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி காலை 9.55 மணிக்கு சட்டசபை வந்தார்.

அவர் வருவதற்கு முன்பாகவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் வந்து அமர்ந்து இருந்தனர். சரியாக 10 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஆங்கிலத்தில் தனது உரையை வாசிக்கத் தொடங்கினார்.

அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. சிந்தனைசெல்வன் எழுந்து நீட் மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பாமல் கவர்னர் காலம் தாழ்த்துவதை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக கூறி வெளிநடப்பு செய்தார்.

அவருடன் விடுதலை சிறுத்தை கட்சி எம்.எல்.ஏ.க்களும் வெளிநடப்பு செய்தனர்.

இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து பேச தொடங்கினார். அவர் பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி கொடுக்கவில்லை. இருந்தாலும் அவர் 5 நிமிடம் தொடர்ந்து பேசிக் கொண்டு இருந்தார்.

தி.மு.க. ஆட்சியை கண்டித்து அவர் பேசினார். இந்த சமயத்தில் கவர்னர் தனது உரையை நிகழ்த்திக் கொண்டு இருந்தார். எடப்பாடி பழனிசாமிக்கு மைக் இணைப்பு கொடுக்கப்படாததால் அவர் பேசுவது முழுமையாக எல்லோருக்கும் கேட்கவில்லை. ஆனாலும் அவர் தொடர்ந்து பேசிக் கொண்டு இருந்தார்.

அந்த சமயம் தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் உரையை வரவேற்று மேஜையை தட்டிக் கொண்டு இருந்தனர்.



அதன் பிறகு எடப்பாடி பழனிசாமி கவர்னர் உரையை புறக்கணிப்பதாக கூறி விட்டு வெளிநடப்பு செய்தார். அவருடன் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம், மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் சட்டசபையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் சிந்தனை செல்வன், எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ், பனையூர் பாபு ஆகியோர் கூட்டாக சட்டசபை வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற தலைவர் சிந்தனை செல்வன் கூறியதாவது:-

அகில இந்திய அளவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழகம் முன்மாதிரியாக திகழ்கிறது. தி.மு.க. அரசின் கொள்கை குறிப்பாக கவர்னர் உரை மீது எங்களுக்கு அளவு கடந்த மரியாதை உள்ளது. ஆனால் அந்த உரையை வாசிக்க தமிழக கவர்னர் தகுதியற்றவராக உள்ளார்.

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் எதிர்ப்பு தீர்மானத்தை அனுப்பி வைக்காமல் கவர்னர் கிடப்பில் போட்டு உள்ளார். இது தமிழக மக்களுக்கு செய்யப்பட்ட மிகப்பெரிய துரோகம்.

தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்கத்தவறிய கவர்னருக்கு ஆளுநர் உரையை வாசிப்பதற்கு எந்த உரிமையும் இல்லை. நாங்கள் ஆளுநர் உரையை மதிக்கிறோம். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் ஆளுநரை கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News