கவர்னரின் வருகையையொட்டி நீலகிரி மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கவர்னர் வரக்கூடிய சாலைகள், ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள ராஜ்பவன் உள்ளிட்ட பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக இன்று மாலை ஊட்டிக்கு வருகிறார்.
இன்று காலை சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத் தொடரின் முதல் நாளில் கவர்னர் உரையாற்றினார். அதன்பின்னர் அவர் பிற்பகலில் சென்னையில் இருந்து விமானத்தில் கோவைக்கு வருகிறார்.
கோவையில் இருந்து சாலை மார்க்கமாக காரில் நீலகிரிக்கு பயணமாகும் கவர்னர் ஆர்.என்.ரவி ஊட்டி தாவரவியல் பூங்கா வளாகத்தில் உள்ள ராஜ்பவன் மாளிகைக்கு செல்கிறார். அங்கு 2 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கிறார்.
தொடர்ந்து 2 நாட்கள் ஊட்டியில் இருக்கும் கவர்னர், 7-ந் தேதி(வெள்ளிக்கிழமை) காலை ஊட்டியில் இருந்து கார் மூலம் புறப்பட்டு மேட்டுப்பாளையத்திற்கு வருகிறார். அங்கு மேட்டுப்பாளையம், அரசு வனவியல் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதனை தொடர்ந்து தனியார் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் கவர்னர் கலந்து கொள்கிறார்.
கோவை, நீலகிரியில் 2 நாட்கள் நிகழ்ச்சியை முடித்து கொள்ளும் கவர்னர் ஆர்.என். ரவி அன்று மாலை கோவை விமான நிலையம் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு செல்கிறார்.
கவர்னரின் வருகையையொட்டி நீலகிரி மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கவர்னர் வரக்கூடிய சாலைகள், ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள ராஜ்பவன் உள்ளிட்ட பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக கவர்னர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஊட்டிக்கு சென்று விட்டு, திரும்பும் வழக்கம் இருந்து வந்தது. கடந்த மாதம் குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.
இதை தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளின் முக்கிய விருந்தினர்களின் பயண வழிகாட்டு நெறிமுறை புத்தகமான நீல புத்தகத்தில் மிக அத்தியாவசிய தேவைகள் இல்லாத நிலையில் நீலகிரியில் வான்வழி பயணத்தை தவிர்க்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதனால் கவர்னர் ரவி சாலை மார்க்கமாகவே கோவையில் இருந்து ஊட்டிக்கு செல்கிறார்.