உள்ளூர் செய்திகள்
இஸ்ரோ தலைவர் சிவன்

ககன்யான் திட்டம் வடிவமைப்பு பணி முடிந்து சோதனைக்கட்டத்தில் நுழைந்துள்ளது- இஸ்ரோ தலைவர் தகவல்

Update: 2022-01-05 03:43 GMT
ககன்யான் திட்டம் வடிவமைக்கும் பணி முடிந்து சோதனைக்கட்டத்தில் நுழைந்துள்ளது. ஆள் இல்லாத சோதனை ராக்கெட் இந்த ஆண்டு ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்து உள்ளார்.
சென்னை:

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தலைவர் மற்றும் இந்திய விண்வெளித்துறை செயலாளர் சிவன் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில், நடப்பு ஆண்டு பல புதிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்து கூறியிருப்பதாவது:-

விண்வெளி துறையில் கடந்த ஆண்டு முதல் முறையாக குறைந்த எண்ணிக்கையிலான ஏவுதல்கள் நடந்தது என்ற உணர்வு உள்ளது. ஆனால் இந்த மந்தமான காலகட்டத்தில் இஸ்ரோ பல பயனுள்ள பணிகளை செய்து முடித்துள்ளது. இதற்காக இஸ்ரோ ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

நடப்பு ஆண்டில் ககன்யானின் முதல் ஆளில்லா ராக்கெட் ஏவுவது உள்பட பல இலக்குகளை நிறைவேற்ற இஸ்ரோ தயாராகி வருகிறது.

விண்வெளி வீரர்களை முதல் முறையாக விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் கனவு திட்டமான ககன்யான் திட்டத்தை கடந்த 2018-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று விண்ணுக்கு செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக தாமதமானது.

இந்த திட்டம் செயல்படுத்துவதற்கு முன்பாக, இந்த ஆண்டு ஆள் இல்லாத சோதனை ராக்கெட்டை விண்ணில் செலுத்தி பல்வேறு கட்ட சோதனைகள் நடக்க இருக்கிறது. தற்போதைய நிலையில், ககன்யான் திட்டம் வடிவமைப்பு கட்டத்தை முடித்து, சோதனை கட்டத்தில் நுழைந்துள்ளது.

தொடர்ந்து எல்.எல்-10 விகாஸ் என்ஜின், கிரையோஜெனிக் நிலை, விண்வெளி வீரர்கள் தப்பிப்பதற்கு பயன்படும் மோட்டார்கள் மற்றும் வீரர்கள் அமரும் பகுதி ஆகியவற்றுக்கான சோதனைகள் நடந்து வருகின்றன. இந்தியாவின் 75-வது சுதந்திர ஆண்டு விழாவிற்கு (வருகிற ஆகஸ்டு 15) முன்னதாக முதல் ஆளில்லா பணியை தொடங்க ஒரு உத்தரவு உள்ளது. இதற்காக அனைத்து பங்குதாரர்களும் கால அட்டவணையை பூர்த்தி செய்ய தங்கள் சிறந்த முயற்சியை மேற்கொள்கிறார்கள். இந்த இலக்கை வெற்றிகரமாக எட்டி விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

அதேபோல், பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் பூமி கண்காணிப்பு செயற்கைகோள்களான இ.ஓ.எஸ்-4 மற்றும் இ.ஓ.எஸ்-6 மற்றும் சிறிய வகை செயற்கைகோள்களை சுமந்து செல்லும் எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் பூமி கண்காணிப்பு இ.ஒ.எஸ்-2 சிறிய வகை செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்படுவது இந்த ஆண்டுக்கான திட்டத்தில் அடங்கும்.

அதேபோல், சந்திரயான்-3 மற்றும் சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 மற்றும் எக்ஸ்போ-சாட், ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். செயற்கைகோள்கள் ஏவுதல் மற்றும் உள்நாட்டிலேயே மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களுடன் செயல்விளக்க பணிகளும் நடக்க இருக்கிறது.

சந்திரயான்-3 விண்கலத்தின் வடிவமைப்பு மாற்றங்கள் மற்றும் சோதனை மிகப்பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ளது. ஆதித்யா எல்-1 விண்கலத்தின் ‘ஹார்டுவேர் இன் லூப்’ என்ற சோதனை மற்றும் எஸ்.எஸ்.எல்.வி. வகை சிறிய வகை ராக்கெட்டுக்கான எக்ஸ்போ-சாட் செயற்கைகோள் தங்குமிட ஆய்வுகள் முடிந்துவிட்டன.

நிசார் என்ற திட்டம் மூலம் ஆபத்துகள் மற்றும் உலகளாவிய சுற்றுச்சூழல் மாற்றங்களை படிப்பதற்கு உகந்ததாக உள்ளது. இயற்கை வளங்களை சிறப்பாக நிர்வகிக்க உதவுவதுடன், காலநிலை மாற்றத்தின் விளைவுகள் மற்றும் வேகத்தை நன்கு புரிந்துகொள்ள விஞ்ஞானிகளுக்கு தகவல்களை வழங்க முடியும். இந்த திட்டம் அடுத்த ஆண்டு செயல்படுத்தப்பட உள்ளது. வீனஸ் திட்டம், டிஷா-இரட்டை ஏரோனமி செயற்கைகோள் பணி மற்றும் 2024-ல் செயல்படுத்தப்பட உள்ள விண்வெளி ஆய்வுக்கான தேசிய மையம் பணி ஆகிய 3 புதிய விண்வெளி அறிவியல் பணிகளுக்கு தயாராக உள்ளன. அனைவரின் ஒத்துழைப்பாலும் இஸ்ரோவின் அனைத்து இலக்குகளும் வெற்றிகரமாக முடிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News