உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

நெல்லையில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா

Published On 2022-01-04 10:04 GMT   |   Update On 2022-01-04 10:04 GMT
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
நெல்லை:

தமிழகம் முழுவதும் வெகுவாக குறைந்த கொரோனா தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. 

உலக நாடுகளை தொடர்ந்து தமிழகத்திலும் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. 

நெல்லை மாவட்டத்திலும் தொற்று பாதிப்பு உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் 27-ந்தேதி மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பூஜ்ஜியமாக இருந்தது. 

தொடர்ந்து கடந்த ஆண்டின் கடைசி நாளான டிசம்பர் 31-ந்தேதி 12 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆக இருந்த நிலையில் இன்று 2 மடங்கு உயர்ந்து 34 ஆக உள்ளது. 

மாநகர பகுதியில் மட்டும் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.நாங்குநேரியில் 5 பேருக்கும், சேரன்மகாதேவியில் 2 பேருக்கும், வள்ளியூரில் 3 பேருக்கும், அம்பை, பாப்பாக்குடி, ராதாபுரம் ஆகிய இடங்களில் தலா ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களையும் கண்டறிந்து அவர்களுக்கு பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது.

மாநகர பகுதியில் அதிகரித்து வரும் தொற்றை கட்டுப்படுத்த மருத்துவ குழுக்கள் தீவிரமாக இறங்கியுள்ளன. மாநகர நல அலுவலர் டாக்டர் ராஜேந்திரன் மேற்பார்வையில், வடமாநிலங்களுக்கு விடுமுறைக்கு சென்று திரும்பும் வடமாநிலத்தவர்களை பரிசோதனை செய்து அவர்களை தனிமைப்படுத்தும் பணியில் மருத்துவ குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். 

பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியிலும் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. 

பொது மக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும், பொது இடங்களுக்கு தேவையில்லாமல் செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

வெளிநாடுகளில் இருந்து வந்து தொற்று ஏற்பட்டவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. அவர்களின் பரிசோதனையில் மாற்றங்கள் இருந்தால் அவை சென்னைக்கு அனுப்பப்பட்டு ஒமைக்ரான் பாதிப்பு உள்ளதா?எனவும் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News