உள்ளூர் செய்திகள்
முகக்கவசம்

பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் சுற்றிய 2,603 பேருக்கு அபராதம்

Published On 2022-01-04 04:28 GMT   |   Update On 2022-01-04 04:28 GMT
கடந்த 4 நாட்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத 2,603 பேர் மீது அபராத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை:

சென்னையில் வேகமாக பரவி வரும் கொரோனாவை தடுக்க மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளை மாநகராட்சி விதித்துள்ளது.

பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களில் சமூக இடைவெளி, முகக்கவசம் இல்லாமல் சுற்றி திரிபவர்கள் மீது உடனடி அபராதம் விதிக்கப்படுகிறது.

தொழில் நிறுவனங்கள், வியாபாரிகள், அதன் பணியாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்க 15 மண்டலங்களிலும் தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவர்கள் வாகனங்கள் மூலம் முக்கிய பகுதிகளில் சுற்றி வருகின்றனர். இது தவிர போலீசாரும் அபராத நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இருசக்கர வாகனங்களில் முகக்கவசம் அணியாமல் சென்றால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

கடந்த 31-ந் தேதி முதல் அபராத நடவடிக்கை வேகப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 1,022 பேர் மீது அபராதம் விதிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 18 ஆயிரத்து 300 வசூலிக்கப்பட்டன.

கடந்த 4 நாட்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத 2,603 பேர் மீது அபராத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.5 லட்சத்து 45 ஆயிரம் வசூலிக்கப்பட்டன.

தொடர்ந்து சென்னை நகர் முழுவதும் முகக்கவசம் அணியாதவர்கள் மீது அபராத நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News