உள்ளூர் செய்திகள்
ஓ பன்னீர்செல்வம்

பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்தை தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

Published On 2022-01-03 05:08 GMT   |   Update On 2022-01-03 05:52 GMT
பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்தை தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

2022-ம் ஆண்டின் முதல் நாளே விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த வருகப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட களத்தூர் கிராமத்தில் ஆர்.கே.வி.எம். பட்டாசு ஆலையில் திடீரென்று ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்த செய்தியையும், ஒரு பெண் உட்பட 8 பேர் படுகாயமடைந்த நிலையில் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியையும் அறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

விபத்திற்கு ஆலை நிர்வாகத்தினரின் கவனக்குறைவே காரணம் என்ற சூழ்நிலையில் ஆலை உரிமையாளர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை தேடும் பணியில் காவல்துறை ஈடுபட்டிருந்தாலும், பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் இனிவரும் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசாங்கம் உடனடியாக எடுக்க வேண்டும் என்றும், ஆலை நிர்வாகத்திடமிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், படுகாயமடைந்துள்ளவர்களுக்கும் இழப்பீடு பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பட்டாசு ஆலைகளின் தகுதி வாய்ந்த வேதியியலர்கள் இருக்கின்றார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், விபத்திற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தேவையான நடவடிக்கையை முதல்-அமைச்சர் உடனடியாக எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News